வாளுடனே சாரங்கம், வார்புகழின் சுதர்சனமும்
ஆளுடைய கேடயமும் ஆண்டருள் எண் கரத்தி;
நாளுடனே நாற்புகழும் நாரணர்க்குத் தானளித்த
தாள்மலரும் தனிவெற்றித் தாயேநீ! போற்றியம்மா!
-செல்வத் திருவருள்மாலை
நித்தமுனை வேண்டிமனம்
நினைப்பதெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கையெல்லாம் வெற்றிகொண்டே
உத்தமநிலை சேர்வரென்றே
உயர்ந்தவேத முரைப்பதெல்லாம்
சுத்தவெறும் பொய்யோடீ?
சுடர்மணியே ! திருவே!
மெத்தமையல் கொண்டுவிட்டேன்
மேவிடுவாய், திருவே!
உன்னையன்றி இன்பமுண்டோ
உலகமிசை வேறே?
பொன்னைவடி வென்றுடையாய்
புத்தமுதே, திருவே!
மின்னொளி தரு நன்மணிகள்
மேடையுயர்ந்த மாளிகைகள்
வன்னமுடைய தாமரைப்பூ
மணிக்குளமும் சோலைகளும்;
அன்னம்நறு நெய்பாலும்
அதிசயமாய்த் தருவாய் !
நின்னருளை வாழ்த்திஎன்றும்
நிலைத்திருப்பேன், திருவே!
ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்
ஈடுநினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனையன்றிச் சரணமுண்டோ?
வாடுநிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப்போல் உள்ளமுண்டோ?
நாடுமணிச் செல்வமெல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான்பொருளே
பெருங்களியே, திருவே!
- மகாகவி பாரதியார்