அக்ஷயம் என்ற சொல்லுக்கு, அழிவின்றி வளர்வது என்று பொருள். வறுமையில் வாடிய குசேலர், வளமையில் குபேரனுக்கு இணையானவாராக மாறிடக் காரணம், கிருஷ்ணர் சொன்ன அக்ஷயம் என்ற ஒரே சொல்தான். பிடி அவலை கிழிந்த துணியில் கட்டி எடுத்துக் கொண்டு நண்பன் கண்ணனைப் பார்க்க வந்தார், குசேலர். ஆனால், அதை அவனுக்குத் தருவதா வேண்டாமா என அவர் தயங்கியபோது கிருஷ்ணன் பிடிவாதமாக அவல் முடிப்பைப் பிடித்திழுத்து உண்டான் அக்ஷயம் என்றான். ஏழ்மையால் நிரம்பியிருந்த குசேலரின் குடிசை ஏழடுக்கு மாளிகையானது. கௌரவர் சபையிலே கௌரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில் அபயம் என்று பாஞ்சாலி அலறினாள். இருந்த இடத்திலிருந்தே அக்ஷயம் என்றான் கோவிந்தன். குறையாது வளர்ந்தது, திரௌபதியின் சேலை. இந்த சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தது, அக்ஷய திரிதியை தினத்தில் தான் என்கின்றன புராணங்கள். அதுமட்டுமல்ல, சாபத்தால் க்ஷயரோகம் (உடல் தேயும் நிலை) பெற்ற சந்திரன், அபயம் என்று அரனைத் தேடி ஓடியதும் இந்த தினத்தில் தான்.
மூன்றாம் பிறையாக இருந்த அவனை, திருமுடி மீது தரித்துக் கொண்டு, முறுவல் பூத்தார் முக்கண்ணன். க்ஷயம் நீங்கி, அக்ஷய வரம் பெற்றான் சந்திரன். சித்திரை மாதத்தில் வரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான் கிருதயுகம் தோன்றியதாகச் சொல்கிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை, யுகாதி என்பர். அந்த வகையில் அக்ஷய திருதியை தினமும் யுகாதிதான். குசேலர், குபேரசம்பத்து பெற்ற சம்பவத்தை நாராயணீயத்தில் எழுத நினைத்த நாராயணபட்டத்திரி, ஒவ்வொரு ஸ்லோகமாக இயற்றி, குருவாயூரப்பனிடம் ஒப்புதல் கேட்டார். அவல் உண்டு தான் செய்த மாயத்தை ஆவலாகக் கேட்டு ஆம் என்று தசையசைத்தான் குருவாயூரப்பன். ஆண்டவனே ஆம் என்று ஏற்ற அந்த அற்புதத் துதியினை, அக்ஷய திரிதியை தினத்தில் சொல்வது, அற்புதமான பலனளிக்கும். தேயாத செல்வம் தேடிவந்து சேரும். மேலான அந்தத் துதி, எளிய தமிழ் விளக்கத்துடன் வழக்கம்போல் உங்களுக்காகத் தரப்பட்டுள்ளது. அக்ஷய திரிதியை தினத்தன்று அகம் முழுதும் பக்தியோடு, இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். ஆண்டவனின் அளப்பரிய அருளால், வறுமையை வென்று வளம் யாவும் வளரப்பெறுங்கள். அதோடு ஸ்லோகத்தின் முடிவில் கூறப்பட்டுள்ளப்படி எளிய பூஜையும் புரியுங்கள் ஏற்றம் உங்கள் வாழ்வில் நிச்சயம்!
குசேல நாமா பவது ஸதீர்யதாம்
கத: ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ:
த்வதேக ராகேண தநாதி நி: ஸ்பருஹோ
திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ
சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா? (நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்பு தலைத் தெரிவித்தார்.
ஸமான ஸீலாபி ததீய வல்லபா
ததைவ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பதவ்ருத்திலப்தயே
ரமாபதி: கிம் ந ஸகா நிஷேவ்ய தே
அவருடைய மனைவியும் அவரைப்போல் நல்ல குணங்கள் உள்ளவர்தான். ஆனால், மனம் பக்குவமடையவில்லையே! குடும்பம் நடத்தப்பட வேண்டிய ஒரு தாயின் எதார்த்த நிலையைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் தன் கணவரிடம் ஒரு வினாவை எழுப்பினாள். திருமகள் கேள்வன் கண்ணன், தங்களின் இளமைக்காலத் தோழனாயிற்றே! அவரை ஏன் நீங்கள் சென்று பார்க்கக் கூடாது? ஏதேனும் பெருஞ்செல்வம் கேட்கமுடியாதா என்றாள். (இது உண்மையா என்று நம்பூதிரி கேட்க குருவாயூரப்பன் ஆமோதித்தார்)
இதீதோ அயம் ப்ரியயயா ஹுதார்த்தயா
ஜுகுப்ஸமா நோபி தநே மதாவஹே!
ததா த்வதா லோகந கௌது காத்யயௌ
வஹந் படந்தே ப்ருதுகாநுபாயநம்
பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் மனைவி, செல்வம் வாங்கிவரச் சொல்கிறாள். ஆனால், செல்வம் செருக்கையே வளர்க்கும் என்பதால் அதனை அறவே வெறுப்பவர் குசேலர். இருப்பினும் மனைவி சொன்னபடி கேட்டால் உன்னைப் பார்க்கலாமே என்ற ஆசை. எனவே, மனைவி சொல்லை ஒரு வியாஜமாக (சாக்காக) வைத்துக் கொண்டு வேஷ்டி நுனியில் வெறும் அவலைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு துவாரகை நோக்கிக் கிளம்பிவிட்டார் அல்லவா? என்று பட்டத்ரி கேட்க, பகவான் ஆமென்று தலையாட்டினார்.
கதோ அயம் ஆஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யாபவநம் ஸமேயிவாந்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதி ஸம்பாவநயாது கிம் புந:
அவர் அதிசயம் அனேகமுற்ற தங்களின் துவாரகைப் பெருநகரைக் கண்டு வியந்தார். ஏராளமான மாளிகைகள் பலவற்றுள் மிகவும் உயர்ந்ததான ருக்மிணியின் மாளிகைக்குள் நுழைந்தார். அப்போது நிஜமாகவே வைகுண்டத்தில் நுழைந்தது போன்ற மகிழ்ச்சி வெள்ளம் தோன்றியது அதன்பின் அங்கு அவருக்கு உன்னுடைய உபசாரத்தால் கிடைத்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அல்லவா? (குருவாயூரப்பன் சிரத்தை அசைத்து ஆமோதித்தார்)
ப்ரபூஜிரம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாய அகதய: புராக்ருதம்
யதிந்தநார்த்த குரு தார சோதிதை:
அபர்து வர்ஷம் தமர்ஷி காநநே
நீர் அவரைக் கொண்டாடி பூஜித்தீர். உம் மனைவி ருக்மணியோ தம் கையாலேயே விசிறியால் வீசி அவரின் மனம் குளிர்வித்தாள். அவரது கையை அன்பாய் கட்டிக் கொண்டு பழைய பால்யக் கதையையெல்லாம் நினைவு கூர்ந்தீர். முக்கியமாக, குருபத்தினி விறகு கொண்டு வரும்படி சொன்னது. தூக்கமுடியாமல் அதைத் தூக்கிக் கொண்டு வரும் பொழுது மழை பொழிய ஆரம்பித்தது. அகால மழையில் நீங்களிருவரும் மாட்டிக் கொண்டு, சொட்டச் சொட்ட வந்து நின்றது என்ற எல்லாவற்றையும் சொன்னீர்கள் அல்லவா? (குருவாயூரப்பன் தலையை அசைத்து ஆமென்று ஆமோதித்தார்)
த்ரபாஜு ÷ஷா அஸ்மாத் ப்ருதகம் பலாத்த
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்ய கரம் ருரோத தே
குசேலர், தான் கொண்டுவந்த அவலை வெட்கத்தால் (மாட மாளிகையில் மகோன்னதமாக வாழ்பவனுக்கு கிழிந்த வேஷ்டியில் மறைத்து வைத்துள்ள சில பிடி பழைய அவலை எப்படிக் கொடுப்பது என்ற லஜ்ஜை) கொடுக்காமல் மறைத்து வைத்துக் கொண்டிருந்தார். நீர் என்னடா வென்றால், வலுவில் அவரிடமிருந்து ஒரு பிடி அவலை எடுத்து உண்டீர். நீர் இன்னொரு பிடி எடுக்குமுன், லக்ஷ்மி தேவியான ருக்மிணி விரைந்தோடி வந்து இவ்வளவு அனுக்ரஹம் செய்தது போதும் என்று உமது கையைப் பிடித்துத் தடுத்தாள் அல்லவா? ( ஒரு பிடி அவலைச் சாப்பிடும் போதே கண்ணன் அக்ஷயம் என்று சொல்லிக் கொண்டு விட்டார். காரணம் இங்கே நடக்க, காரியம் குசேலர் இல்லத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது! நம்பூதிரி கேட்டதற்கு குருவாயூரப்பன் ஆம் என்று ஆமோதித்தார்)
பக்தேஷீ பக்தே ந ஸ மாநிதஸ் த்வயா
புரீம் வஸந்நேக நிஸாம் மஹாஸுகம்
பதேபரேத்யுர் த்ரவிணம் விநா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ
பக்தர்களுக்குப் பக்தனான நீர், குசேலருக்கு அளித்த மரியாதை உபசாரம், அனுக்ரஹம் ஆகியவைகளால், அவர் தம்மை மறந்து உமது நகரில் ஓர் இரவு மகா சுகமாய்ப் பொழுதைக் கழித்தார். மறுநாள், பொருள் ஏதும் பெறாமல் தன்னுடைய ஊருக்குப் போனாரல்லவா? உமது அனுக்கிரஹம் விசித்ரமானதல்லவா? (பட்டத்ரியின் வினாவுக்கு, குருவாயூரப்பன் தலையசைத்து ஆமோதித்தார்)
குசேலர், கண்ணனின் தரிசனத்தையும் அன்னியோன்யத்தையும் விரும்பினாரல்லவா! அவர் பொருளை விரும்பவில்லையே! அதனால் பரந்தாமன் அவருக்குப் பொருளைக் கொடுக்காமல், தரிசன சுகத்தையும் அன்னியோன்யமான சுகத்தை மட்டும் கொடுத்தார்.
யதிஹ்யயாசிஷ்ய மதாஸ்யதச்யுதோ
வதாமி பார்யாம் கிமிதி வ்ரஜந்நஸெள
த்வதுக்தி லீலா ஸ்மித மக்நதீ: புந:
க்ரமா தபஸ்யந் மணி தீப்ரமாலயம்
நான் பொருள் கேட்டிருந்தால், அச்சுதன் கொடுத்திருப்பார். இப்போது மனைவி கேட்டால் என்ன செய்வது? என்று குசேலர் வழியில் நினைத்துக்கொண்டே போனார். ஆனால், மறுகணம் உம்முடைய குறும்புப் பேச்சு, புன்சிரிப்பு மந்தஹாஸமுகம் அவரின் மனத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கமுக்காடச் செய்தது. அப்படியே எண்ணிக்கொண்டு நடந்தவர், தன்னுடைய இருப்பிடத்தில் ஒரு ரத்னமயமான் மணிமாளிகையைக் கண்டாரல்லவா? (நாராயண பட்டத்ரியின் கேள்விக்கு ஐயன் தலை யசைத்தார்)
கிம் மார்க்க விப்ரம்ஸ இதிப்ரமத்
க்ஷணம் க்ருஹம் ப்ரவிஷ்ட ஸ ததர்ஸ வல்லாபாம்
ஸகீ பரிதாம் மணி ஹேம பூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மஹாத்புதாம்
குசேலர், வழிதவறி வேறிடத்திற்கு வந்து விட்டோமோ என்று பிரமித்துப் போனார். பின்னர் தன் மாளிகைக்குள்ளேயே பயத்துடன் மெதுவாக நுழைந்தார். அங்கு பணிப் பெண்களால் சூழப்பட்டு, ரத்னங்களாலும், பொன்னாலும் அலங்கரிக்கப்பட்டு தோழிகள் புடைசூழ அமர்ந்திருந்த தமது மனைவியைக் கண்டார். இவையாவும் உமது அற்புதமான அருள் என்று அறிந்தார் அல்லவா? (நம்பூதிரியின் கேள்விக்கு குருவாயூரப்பன் தலையசைத்து ஆமோதித்தார்)
ஸ ரத்ன ஸாலாஸு வஸந்நபி ஸ்வயம்
ஸமுன்ன மத்க்திபரோ அம்ருதம் யயௌ
த்வமேவாபூரித பக்த வாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே கதாந்
ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியின் பயனாக முக்தியடைந்தார். இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும்.
அக்ஷ்ய திரிதியை பூஜை முறை: அக்ஷய திரிதியையன்று செய்யும் ஸ்நானம், ஜபம், ஹோமம், தர்மம் எல்லாமே அக்ஷயமாக வளர்ந்துகொண்டே போகும்; தாரித்ரியம் விலகும் என்பது உறுதி. குசேலர் சரித்திரம் படித்தால் அருளும், பொருளும் அமோகமாக வளரும். எனவே, அக்ஷயதிரிதியை அன்று அதிகாலையில் எழுந்து நீராடியபின் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள். மகாலக்ஷ்மி படத்தின் முன் (லக்ஷ்மி நாராயணர் படம் இருப்பின் சிறப்பு) கோலமிட்டு, நுனிவாழை இலை ஒன்றை வையுங்கள். அதன் நடுவே கொஞ்சம் அரிசியை பரப்பி வைத்து அதன்மீது நீர் நிரம்பிய கலசம் (செம்பு) ஒன்றினை இருத்துங்கள். மஞ்சளால் ஒரு பிள்ளையாரைப் பிடித்து அந்த கலசத்தின் அருகே வைத்து, பொட்டிட்டு, மலர்சூட்டுங்கள். மகாலக்ஷ்மியை மனதார நினைத்தபடி மேலே தரப்பட்டுள்ள துதியைச் சொல்லுங்கள். தூப, தீபம் காட்டியபின், பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள். வாட்டிடும் வறுமை தொலைந்து, இனிமையும், வளமையும் வாழ்வில் கூடும் அக்ஷயமாக ஆனந்தமும், செல்வமும் வளரும்.
அட்சய திருதியையன்று சொல்ல வேண்டிய அலைமகள் துதி
தேவி பாகவதத்தில் மகாவிஷ்ணுவே மகாலட்சுமியைப் போற்றிச் சொன்ன சில ஸ்லோகங்கள் எளிய தமிழ் விளக்கத்துடன் இங்கு தரப்பட்டுள்ளது. அட்சய திருதியை தினத்தில் அகம் முழுக்க அலைமகளை நினைத்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடுங்கள். அல்லது இதன் எளிய தமிழ் அர்த்தத்தை மட்டுமாவது சொல்லுங்கள். பொன்மகள் அருளால் உங்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கும்.
ஊர்ணநாபாத் யதாதந்து: விஸ்புலிங்கா: விபாவஸோ
ததா ஜதத் யதேதஸ்யா: நிர்கதம்தாம் நமாம்யஹம்
பொருள் : சிலந்தியின் வாயிலிருந்து அழகிய நூல் வருவது பால, பெரும் தீயிலிருந்து பொறிகள் பல எழுவது போல, எந்தத் தாயின் பாதங்களிலிருந்து ஞாலமாகிய பல்லாயிரம் அண்டங்கள் பெருகி எழுந்தனவோ அந்தத் தாயின் இணையடிகளைப் போற்றுகிறேன்.
யன் மாயாசக்தி ஸம்ஸப்தம் ஜகத் சர்வம் சராசரம்
தாமசிதாம் புவநாதிதாம் ஸமராம கருணார்ணவாம்
பொருள் : இந்த உலகின் இயக்கத்தையே தன் மாயா சக்தியால் அசைவின்றி நிற்கச் செய்யும் அரிய ஆற்றலை தன்னகத்தே கொண்டு இயங்குபவள். தன்னால் மயங்கிய அண்டங்களையெல்லாம் மீண்டும் இயங்க வைக்கும் புவனங்களின் தாய் அவள்.
யதக்ஞாநாத் பவோத்பத்தி: யதக்ஞாநாத் பவநாஸநம்
ஸம்வித்ரூபாம்சதாம் தேவீம் ஸ்மராம: ஸா ப்ர சோதயாத்
பொருள் : அஞ்ஞானத்தால் எந்த தேவியின் பெருமையை அறியாமல் விட்டவர்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொள்கிறார்களோ; எவளின் அருமையை உணர்ந்து போற்றித் தொழுபவர்கள், பலர் போற்றும் வகையில் வாழ்கிறார்களோ, அந்த தேவியின் அருளை வியந்து நெஞ்சாரப் போற்றுகின்றேன்.
மாதர்நதாஸ்ம புவநார்த்தீஹரேப்ரஸீத
மந்நோ விதேஹி குரு கார்யமிதம் தயார்த்ரே
பாரம் ஹரஸ்வ விநிஹத்ய ஸுராரி வாக்கம்
மஹ்யா மஹேஸ்வரி ஸதாம் குரு சம்பவாநி
பொருள் : தாயே வணங்கிப் பணிகிறேன். புவனத்தின் கஷ்டங்களைத் தீர்ப்பவளே போற்றி. எங்கள்பால் அன்பு வைத்து இன்னல்களைத் தீர்ப்பாயாக. துன்பச் சுமைகளைக் குறைக்கின்றவளே போற்றி. நல்லோரின் எதிரிகளை அழித்து நன்மைகளைத் தருபவளே போற்றி. எங்களுக்கு இன்பத்தைத் தரும் மஹேஸ்வரியே போற்றி.
மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
ஸர்வ சக்த்யை ச தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்
பொருள் : மகாசக்தியாகவும், உயிர்களை உய்விப்பவளாகவும் நன்னெறியில் நம்மை நடத்திச் செல்பவளாகவும் உள்ள தேவி எங்களைக் காத்திடட்டும். எங்கள் செயல்களை அவளே ஊக்குவிக்கட்டும்.
ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸிநீம் பராம்
சரத் பார்வண கோடீந்து ப்ரபாம் முஷ்டிகராம் பராம்
பொருள் : ஆயிரம் இதழ்த் தாமரையில் அமர்ந்தவளே! கருஞ்சிவப்பு நிற ஆடை உடுத்தியவளே! கோடிக்கணக்கான சரத் கால சந்திரனைப் போல் ஜொலிப்பவளே-எழிலார்ந்த அன்னையே.. உன் திருவடிகளைப் போற்றுகிறேன்.
ஸ்வ தேஜஸா ப்ரஜ்வலந்நீம் ஸுகத்ருஸ்யாம் மநோ ஹராம்
ப்ரதப்த காஞ்சந்திப சோபாம் மூர்த்திமதீம்ஸதீம்
பொருள் : சுயமான அவள், தன் ஒளியால் ஒப்பில்லா மணியாகப் பிரகாசிப்பவள். தவறில்லாத இன்பத்தைத் தரும் மனோகரமானவள். மாசில்லா பொன்னுக்கும் மேலானவள். ஜோதியே உருவானவள். கற்பில் சிறந்தவள். அப்படிப்பட்ட அலைமகளுக்கு வணக்கம்.
ரத்ந பூபஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாசஸா
ஈஷத் தாஸ்யாம் ப்ரஸந்தாஸ்யாம் சச்வத் ஸுஸ் திரயௌவனாம்
ஸர்வ சம்பத் ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்
பொருள் : ரத்னமயமான ஆபரணங்களை அணிந்து ஒளிர்பவளே. மங்களகரமான மஞ்சள் வண்ணப் புடவை உடுத்துபவளே. பணிபவர்களின் கோரிக்கைகளை ஒன்றுக்குப் பன்மடங்காகத் தருபவளே. குறையாத இளமையும், வளமுடையவளே. அனைத்துச் செல்வங்களையும் தருபவளே. அன்னையாம் மஹாலக்ஷ்மியே, உனைப் போற்றி வணங்குகிறோம்.