|
தெனாலி ராமன் வீடு அருகில் தோட்டம் இருந்தது. தோட்டத்தில் பெரிய கிணறு இருந்தது. இருந்தாலும், செடி, கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் வாடிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த தெனாலிராமன்,வேலைக்காரர்களும், குடும்பத்தாரும் சரியாக தோட்டத்தை கவனிக்கவில்லை போலிருக்கிறதே! என வருத்தத்தில் இருந்தான். அன்றிரவில் வீட்டருகில் இரு திருடர்கள் நோட்டம் விட்டபடி இருந்ததைக்கவனித்து விட்டான். அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட ராமன்,சத்தமிட்டபடி தன் மகனை எழுப்பினான்.அவனிடம் ஒரு இரும்புப் பெட்டியைக் காட்டி,இப்போதெல்லாம் ஊருக்குள் திருட்டு பயம் அதிகமாகி விட்டது. நகைகளையெல்லாம் இந்த பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருக்கிறேன். இதை இப்போதே நம் வீட்டுத் தோட்டத்து கிணற்றுக்குள் போட்டு பாதுகாப்பாக வைத்து வருவோம். தேவையான போதுஎடுத்துக் கொள்ளலாம், என்றான். அப்பாவும், பிள்ளையுமாக பெட்டியைத் துõக்கி வந்து கிணற்றுக்குள் போட்டனர். மகிழ்ந்த திருடர்கள் பெட்டியை எடுப்பதற்காக, கிணற்றில் இருந்த நீரை இறைத்து வெளியே ஊற்றினர். மறைந்திருந்த ராமனும்,அவனது மகனும் அவர்களுக்கு தெரியாமல் ஆளுக்கொரு மண் வெட்டியால் ஓடிய தண்ணீரை தோட்டத்திற்குப் பாய்ச்சினர். ஒருவழியாக கிணற்றில் பெட்டியை எடுத்த திருடர்கள் அதில் கற்கள் மட்டுமே இருந்தது கண்டு ஏமாந்து போயினர். அப்போது, தெனாலி திருடர்களைப் பார்த்து,நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. தோட்டத்திற்கு முழுமையான தண்ணீர் பாய்ந்து விட்டது என்றான். சத்தம் கேட்ட திருடர்கள் ஓட்டம் பிடித்தனர்.
|
|
|
|