|
மனைவி மீது கோபம் வரும் போதெல்லாம் அவளைப் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் இதே பார்! நான் சந்நியாசி ஆகி விடுவேன் என்று சொல்லி வந்தான். அவளோ அவன் கூறுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.ஒருநாள் வழக்கம் போல தன் பல்லவியைத் தொடர்ந்தான். அவளும்,நீங்கள் ஒன்றும் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்கள் முடிவுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். தாராளமாக இப்போதே சந்நியாசி ஆகலாம், என்று படபடவென பேசினாள். மனைவி இப்படி பேசுவாள் என கணவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வேறுவழியின்றி துண்டை உதறித் தோளில் போட்டபடி கால் போன திசையில் நடந்தான். ஒரு கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து ஆற்றில் குளித்தான். காவி உடை அணிந்தான். ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தான். ஓரிரு மணி நேரம் ஆனதும், பசி உண்டானது. போவோர் வருவோரைப் பார்த்தான். யாரும் சாப்பிட ஏதும் தரவில்லை. மாலைவேளை கழிந்து இருள்சூழ தொடங்கி விட்டது. பசியோடு பயமும் தொற்றிக் கொண்டது. கோயில் நடை சாத்தியதால் அந்த பகுதியே அமைதியானது.
ஒருவர் கூட அவன் கண்ணில் தென்படவில்லை. பயம் அதிகரித்தது. இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல என்று வீட்டுக்குப் புறப்பட்டான்.நன்றாக இருட்டியதால் பாதையில் இருந்த மேடு, பள்ளம் கண்ணுக்குத் தெரியவில்லை. பசியால் நடையும் தள்ளாடியது. நடுஇரவில் தன் சொந்த ஊருக்குள் நுழைந்தான். மொட்டைத்தலையுடன் வந்த இவனைக் கண்டதும் நாய் குரைக்கத் தொடங்கியது. உடம்பெல்லாம் வியர்த்தது. ஒரு வழியாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான்.யார் அது இந்நேரத்தில்? என்று உள்ளிருந்து மனைவியின் குரல் கேட்டது.நான் தான் வந்திருக்கிறேன் என்று பதில் கொடுத்தான்.கணவரின் குரல் என்பதை அறிந்த மனைவி கதவைத் திறந்து விட்டாள். அவனது கோலம் கண்டு பலமாகச் சிரித்தாள். இது சந்நியாசி தங்குற இடம் இல்லை. ஏதாவது ஆஸ்ரமத்திற்குச் சென்று தங்கிக் கொள்ளுங்கள் என்று கேலி செய்தாள்.அவளிடம் அறியாமல் பிழை செய்த என்னை புண்படுத்தாதே! நான் விளையாட்டாகச் செய்ததை உண்மை என எண்ணி பெரிதுபடுத்திக் கொள்ளவேண்டாம். காலையில் நீ கொடுத்ததை சாப்பிடாமல் போய்விட்டேன். இப்போதோ பசியில் உடல் சோர்ந்து விட்டது. இனி கனவில் கூட சந்நியாசம் பற்றி நினைக்க மாட்டேன். என்னை ஏற்றுக் கொள், என்று கெஞ்சினான். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்பதை உணர்ந்த கணவன் மீது மனைவிக்கும் இரக்கம் உண்டானது. சந்நியாசம் என்பது விளையாட்டு அல்ல. குடும்பப் பிரச்னைக்கு அது தீர்வும் அல்ல. கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் அதைப் பேசித்தீருங்கள். பயமுறுத்தல் போன்ற வேலைகள் இருவருக்குமே நல்லதல்ல.
|
|
|
|