|
வனவாசத்தின்போது, ராமர் மதங்க மாமுனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். மதங்கரின் சிஷ்யையான சபரி, ராமரை அன்புடன் வரவேற்றாள். அந்த ஆஸ்ரமத்தில் நறுமணம் கலந்த தென்றல்வீசியது. அதை உணர்ந்த ராமன் மணம் வந்த திசை நோக்கி நடக்க சபரியும் பின்தொடர்ந்தாள். அங்கு நறுமணமுள்ள மலர்கள் பூத்திருந்தன. அதைக் கண்ட ராமர், நறுமணம் மிக்க இந்த மலர்களைக் கண்டதும் மனம் மகிழ்கிறதே! இதை நட்டு வைத்தவர் யார்? என்று கேட்டார்.அதற்கு சபரி, மதங்க மகிரிஷியின் மகிமை தான் இது. நான் அவருக்கு பணிவிடைசெய்து வருகிறேன். மழைக்காலத்தில் ஒருநாள் சமைப்பதற்கு விறகே இல்லாமல் போனது. சீடர்கள் யாரும் விறகு பொறுக்க செல்லவில்லை. உடனே முதியவரான மகரிஷியே, சிறிதும் தயங்காமல் தானே கோடரியை தோளில் போட்டுக் கொண்டு விறகு வெட்டக் கிளம்பி விட்டார். இதைக் கண்டு சீடர்களும் ஆளுக்கொரு கோடரியுடன் அவர் பின்னால் சென்றனர். மாலை நேரம் வரை அனைவரும் விறகுகளை வெட்டிக் கொண்டு ஆளுக்கொரு கட்டுடன் திரும்பினர்.அடுத்த நாள் காலையில் எழுந்த போது, காற்றில் நறுமணம் எங்கும் கமழ்ந்தது. என்னவென்று புரியவில்லை. நாங்கள் நடந்து சென்ற போது தான் எங்களுக்கு உண்மை புரிந்தது. வயதானாலும் கூட, யாரையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் புறப்பட்ட மதங்கரின் நெற்றி வியர்வை விழுந்த இடத்தில் எல்லாம் மணம் மிக்க பூச்செடிகள் வளர்ந்து இருப்பதை அறிந்து மகிழ்ந்தோம், என்றாள். உழைப்பின் உயர்வை அறிந்த ராமரும் மகிழ்ந்தார். |
|
|
|