|
இப்போதெல்லாம் பொங்கல் என்றால், கடமைக்கு காஸ் ஸ்டவ்வில் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை வைத்து விட்டு, அப்படியே டிவி முன் முடங்கிப் போகிறார்கள். ஒரு காலத்தில் பொங்கல் என்றால் கிராமங்கள் களைகட்டும். இதிலே கன்னிப்பொங்கல் என்று ஒரு வகை. திருமணமாகாத இளம்பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாடியபடியே ஆற்றங்கரைக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். பக்க வாத்தியமாக மேளம் அடிப்பார்கள். அங்கே இஷ்டப்படி ஆடல், பாடல் என விளையாடி விட்டுக் கூட்டாஞ்சோறு சமைப்பார்கள்.அதை நதி மாதாவுக்கு படைத்துப் பூஜை செய்வார்கள். ஆற்றுக்குக் கன்னி என்று பெயரும் உண்டு. ஆம்..வான் பொய்ப்பினும் தான் பொய்யாதவை ஆறுகள். ஆம்..மழை பெய்யாவிட்டாலும், தன்னுடைய ஊற்று நீரால் அனைவரையும் வாழ வைப்பவை ஆறுகள். அதாவது, என்றுமே தனது கன்னித்தன்மை குறையாதவை. எனவே, அந்த ஆறுகளை கன்னி அம்மனாக நினைத்துப் பூஜை செய்வது இந்த பொங்கலின் நோக்கம்.கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதா, துங்கபத்ரா, சரயு என்னும் ஒன்பது நதிகளையும் நவநதிகள் என்பர். இந்த நதிகளை நினைத்து ஆற்றங்கரைகளில் வழிபாடு நடக்கும். இந்த நவ கன்னிகைகளின் அழகிய விக்ரகங்களை கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் இருக்கும் விஸ்வநாதசுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.வழிபாடு முடிந்ததும் கூட்டாஞ்சோறை சாப்பிட்டு விட்டுக் குதுõகலத்துடன் வீடுதிரும்புவார்கள் பெண்கள். இதிலே இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. கன்னியர் தாங்கள் விரும்பும் மணமகன் பற்றி, நதி மாதாவிடம் முறையிடுவார்கள். அவள் இவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து, மனதில் நினைத்தவனை மணம் முடித்து வைப்பாளாம். அடுத்தமுறை அந்தக் கன்னிதிருமதியாகி விடுவாள். |
|
|
|