|
மகாராஷ்டிரா மகான் ஏகநாதர், கங்கை தீர்த்த பாத்திரத்தை காவடி போல தோளில் சுமந்து ராமேஸ்வரத்திற்கு சீடர்களுடன் புறப்பட்டார். ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணம். அப்போது கோடை வெயில் கொளுத்தியது. காலணிஅணியாத ஏகநாதருக்கு சூடு தாங்கவில்லை. அந்த வழியே ஒரு கழுதை பொதியுடன் சென்று கொண்டிருந்தது. வெயிலில் அது களைத்துப் போயிருந்தது. அது தாகத்தால் தவிப்பதை ஏகநாதர் புரிந்து கொண்டார். தன்னைப் போலவே, அதுவும் ஒரு உயிர் தானே! என்ற எண்ணம் எழுந்தது. மறுயோசனை இல்லாமல் தீர்த்தக்காவடியை கழுதையின் பக்கத்தில் இறக்கி வைத்து, ராமநாதரின் திருநாமத்தைச் சொல்லியபடி கழுதையின் வாயில் கங்காதீர்த்ததை விட்டார். உயிரே திரும்பியது போல கனைத்த கழுதை, ஏகநாதருக்கு நன்றி தெரிவிப்பது போல கழுத்தை உயர்த்திப் பார்த்தது. சீடர்கள் அவரது செயல் கண்டு திகைத்தனர். அதைப் புரிந்து கொண்ட ஏகநாதர் சீடர்களிடம், ராமநாதருக்கு சேர வேண்டிய கங்கா தீர்த்தத்தை கழுதைக்கு கொடுத்தது பற்றி தானே யோசிக்கிறீர்கள். கடவுள் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். கங்காதரரான சிவனே இங்கு கழுதை வடிவில் வந்து தாகத்தை தணித்துக் கொண்டதாகவே கருதுகிறேன். இது தான் கடவுள் விரும்பும் நிஜமான கங்காபிஷேகம், என்றார்.எல்லா உயிர்கள் மீது இரக்கம் வேண்டும் என்பது இவரது செயல் மூலம் உணர்த்தப்படுகிறதல்லவா! |
|
|
|