|
150 ஆண்டுக்கு முன் அம்மன் நிகழ்த்திய திருவிளையாடல் ஒன்றைக் கேளுங்கள். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்த ஆதி சுமை தாங்கிக் கல் அருகில் பூலாவுடைய தலைவனாரும், அவரது மகன் பாண்டியத் தலைவனாரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த இடம் இன்றும் மேடையிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அருகே 11வயது சிறுமி நீண்ட நேரமாக நின்றாள். பூலாவுடைய தலைவனார்,யாரம்மா நீ? ரொம்ப நேரமா நிக்கிறியே! என்னம்மா வேணும்? என்றார்.அவள், இங்க யார் வீட்டுலயாவது ஏதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு வந்தேன் என்றாள்.மலர்ந்த முகத்துடன்,தாயி! எங்க வீட்டுக்கு வாரியா? எம் மவளைப் போல பாத்துக்கறேன் என்றார் தலைவனார்.அவளும் ஒப்புக்கொண்டு வேலை செய்தாள். ஒருநாள், தலைவனார் அவளிடம் மாடியை மெழுகச் சொன்னார். குழந்தையும் மாடிக்குப் போனாள். சற்று நேரத்தில் அங்கு பெண்கள் குலவை இடும் ஓசை மட்டும் எழுந்தது.
தலைவனார் ஆச்சரியத்துடன் மாடிக்குச் செல்ல அங்கு நறுமணம் கமழ்ந்தது. மெல்லிய புகைப்படலமும் தெரிந்தது. குழந்தையைக் காணவில்லை. பக்தா! நான் தேவலோகப் பெண் தெய்வம். ஒரு சமயம் பிரம்மன் ரதத்தில் சென்ற போது சக்கரத்தின் அச்சு முறிந்து போனது. நான் என் கையைக் கொடுத்து நிலை குலையாமல் காத்தேன். ரதம் நின்றதும் பிரம்மா கீழிறங்கினார். அதன்பின், என் கையை எடுக்க ரதம் கீழே விழந்தது. நடந்ததை அறிந்த பிரம்மா, தேவி! என் ரதத்தைக் காப்பாற்றிய நீ இன்று முதல் வண்டி மறிச்சி அம்மன் என்று பெயருடன் பூலோகத்தில் அருள் புரிவாயாக, என வாழ்த்தினார். அதற்காக பூலோகம் வந்த போது, அன்பும், கருணையும் நிறைந்த உன்னிடம் ஒன்றும் அறியாத சிறுமியாக வந்தேன். எனக்குரிய ஆகாரத்தை படைத்து விட்டு சிறிது நேரம் கழித்து வா! என அசரீரியாக ஒலித்தது. தலைவனாரும் படையல் இட்டுச் சென்றார். அதை ஏற்றுக் கொண்ட அம்பிகை நேரில் காட்சியளித்தாள்.இங்கேயே எனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்து. வேண்டும் வரம் அளிப்பேன். ஒரு கிணறும் தோண்டு. அதன் தண்ணீர் இளநீர் போல இனிக்கும், என்று சொல்லி மறைந்தாள்.அதன்படி வண்டிமறிச்சி அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.சமீப காலத்தில் அம்பிகையின் அருளால் நிகழ்ந்த திருவிளையாடல் இது. |
|
|
|