|
மகத நாட்டின் தலைநகர் ராஜகிருஹத்தில் இருந்தார் புத்தர். ஏழைகளுக்கு உதவி செய்ய நன்கொடை தரலாம் என அறிவித்தார். மன்னன் பிம்பிசாரனும், அவனது மகன் அஜாதசத்ருவும் நன்கொடை அளித்து புத்தரின் ஆசியைப் பெற்றனர். அந்த நாட்டு செல்வந்தர்களும் வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். புத்தர் அவற்றை ஒரு கை மட்டும் நீட்டி பெற்றுக் கொண்டார். அப்போது ஒரு ஏழை மூதாட்டி தயக்கத்துடன் வந்தாள். அவள் கையில் மாதுளம்பழங்கள் இருந்தன. அவள் புத்தரிடம், சுவாமி! ஏழையான என்னிடம் பணம் இல்லை. என் வீட்டு புழக்கடையில் உள்ள மாதுளம் செடியில் பறித்த இந்தக் கனிகளைக் கொண்டு வந்தேன், என்றாள். அவற்றைப் புத்தர் இரண்டு கைகளையும் நீட்டிப் பெற்றுக் கொண்டார். புத்தரின் செயல்பாடு பிம்பிசாரருக்கு வியப்பைத் தந்தது. விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொடுத்த நம்மிடம் புத்தர் ஈடுபாடு காட்டவில்லை. ஒரு கையால் வாங்கிக் கொண்டார். ஆனால், இவள் தந்த சாதாரணப் பொருளை இரு கைகளாலும் வாங்கி பரவசப்படுகிறாரே என எண்ணினார். மன்னரின் உள்ளக்குறிப்பை உணர்ந்த புத்தர், பிம்பிசாரா! விலை மதிப்புள்ள ஆபரணங்களை கொடுத்தாலும் உன்னுடைய மொத்த உடைமையில் அது ஒன்றும் பெரிதல்ல. இங்கு கூடியிருப்பவர்கள் அனைவரும் பெருமைக்காகவே தானம் செய்தார்கள். இவள் இந்தப் பழங்களை வெளியில் விற்றிருந்தால் அவளுக்கு பணம் கிடைத்து பசி தீர்ந்திருக்கும். ஆனால், தன் பசியை விட பிறர் பசி தீர்க்க முன் வந்தாளே! இவளல்லவா உயர்ந்தவள். அதனால் தான் என் இரண்டு கைகளும் நீண்டன, என்றார். |
|
|
|