|
ராமானுஜருக்கு பிச்சையிட்ட பெண் அழுதபடியே வீட்டுக்குள் சென்றாள். இதைக் கண்ட ராமானுஜர் ஏதோ விஷயம் இருக்கிறது என தீர்மானித்தார். அவள் அளித்த உணவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. ராமானுஜர் மீது வெறுப்பு கொண்டவர்கள் செய்த சதி வேலையே என்பதை அவர் உணர்ந்தார்.இதைக் கேள்விப்பட்ட ராமானுஜரின் குருநாதரான திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜரைக் காண ஸ்ரீரங்கம் விரைந்தார். குருநாதர் வருவதை அறிந்த ராமானுஜர் அவரை வரவேற்க புறப்பட்டார். மதிய வேளையில் காவிரிக்கரை மணல் பரப்பில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.ராமானுஜர் குருநாதரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். கடும் வெயிலில் மணல் உடலைச் சுட்டது. ஆனால், குருநாதர் அவரை எழுந்திருக்கச் சொல்லாமல் மவுனம் காத்தார். அருகில் நின்ற ராமானுஜரின் சீடருக்கு மனம் பொறுக்கவில்லை. இது என்ன அநியாயம்? விஷ உணவு கொடுத்ததை விட, உம்முடைய செய்கை இன்னும் கொடுமையாக இருக்கிறதே! என்று சொன்னதுடன், ராமானுஜரைத் துõக்கவும் முயன்றார். அந்த சீடரின் அன்பைக் கண்டு திருக்கோஷ்டியூர் நம்பி சிரித்தபடி,ராமானுஜர் மீது அன்பு மிக்கவர் யார் என்று யோசித்துக் கொண்டே நின்றேன். நீர் தான் தகுதியானவர் என்பதை நிரூபித்து விட்டீர். இனிமேல் ராமானுஜருக்கு மடைப்பள்ளி கைங்கர்யத்தை (உணவு தயாரிக்கும் பணி) நீரே ஏற்கவேண்டும் என்று கட்டளையிட்டார். கிடாம்பி ஆச்சான் என்னும் அந்த சீடரே, ராமானுஜருக்கு உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார்.
|
|
|
|