|
இன்டர்நெட்,மொபைல், இன்னும் பல நவீனசாதனங்கள்
அறிவியல் வேகத்தால் மக்களுக்கு நன்மை தருவதற்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
ஆனால், இவற்றை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துபவர்கள் அதிகமாகி
விட்டனர். இவர்களுக்கு என்ன கதி கிடைக்கும் என்பதை அறிய விரும்பினால்,
சுக்கிரனின் கதையைக் கேளுங்கள். சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்த
சுக்கிரன், அதற்கு தினமும் பூஜை செய்து வந்தார். அவருடைய பக்தியைக் கண்ட
சிவன் சுக்கிரனுக்கு காட்சியளித்து, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி
மந்திரத்தை உபதேசித்தார். வரம் பெற்ற சுக்கிரனை அசுரர்கள் தங்கள்
குருநாதராக ஏற்றனர். பின், அசுரர்களின் தீய செயல்களுக்கு எல்லாம் துணை
நின்றார். சஞ்சீவினி மந்திர பலத்தால் தேவர்களால் கொல்லப்பட்ட அசுரர்களை
உயிர் பிழைக்க வைத்தார். இதனால், அசுரர்களின் அட்டகாசத்தை அடக்க யாராலும்
முடியவில்லை. பயந்து போன தேவர்கள், சுக்கிரனுக்கு வரம் தந்த சிவனிடம்
தங்களைக் காத்தருள வேண்டினர். பெற்ற வரத்தை அதர்ம வழியில் பயன்படுத்திய
சுக்கிரனை சிவபெருமான் விழுங்கி விட்டார். பின்னர் தேவர்கள் அசுரர்களைத்
தோற்கடித்தனர். பெரிய இடத்து தயவு இருக்கிறது என்பதற்காக ஆட்டம் போட்டால்,
அந்த பெரிய இடமே அவர்களைக் கவிழ்த்து விடும்...புரிகிறதா! |
|
|
|