|
ஒரு சமயம் பார்வதி தேவிக்கு, சிவன் ஆகமங்களை உபதேசிக்க விரும்பினார். இதற்காக நந்தீஸ்வரரிடம் தன் குழந்தைகளான விநாயகர்,முருகனை ஒப்படைத்துச் சென்றார். பாடம் ஆரம்பித்தது. பார்வதி பாடத்தைக்கேட்காமல், வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். சிவன்கோபமடைந்து, தேவியை ஒரு மீனவப் பெண்ணாகப் பிறக்கும்படி சாபமிட்டார். மீனவ இனத்துக்கு நன்மை செய்வதற்காகவே சிவன் இந்த திருவிளையாடலைப் புரிந்தார். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரை விட்டு விநாயகரும், முருகனும் விளையாட்டுத்தனமாக பாடம் நடக்கும் இடத்திற்கு ஓடிவந்தனர். தாயை சபித்ததால், தந்தை மீது அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. ஆகமச் சுவடிகளை கடலில்விட்டெறிந்தனர். பிள்ளைகளை சரிவர கவனிக்காத நந்தீஸ்வரர் மீது கோபப்படுவது போல சிவன் நடித்தார். “கொடுத்த வேலையைச் சரிவர செய்யாத நீ, பாதுகாவலுக்கு தகுதியில்லாதவன்’ எனக்கூறி, சுறா மீனாகப் பிறக்கும்படி சபித்தார். கடலுக்குள் சுறாவாகத் திரிந்த நந்தீஸ்வரர் அட்டகாசம் செய்தார். மீனவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அதனைப் பிடித்து தரும் மீனவனுக்கு தன் மகளையே பரிசாக்குவதாக அறிவித்தார் மீனவர் தலைவர். அந்த தலைவரின் மகளாக வளர்ந்தாள் பார்வதி. அவளை மணந்து மீண்டும் சிவலோகம் அழைத்து வர, சிவனேமீனவராக வந்து சுறாவின் கொட்டத்தை அடக்கினார்.மீனவர் தலைவனுக்கு காட்சி தந்து பார்வதியை மணந்தார்.பாடத்தை கவனமாகக் கேட்க வேண்டும். கொடுத்த பணியைக் கவனமாகச் செய்ய வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டவே சிவன்இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார். |
|
|
|