|
மங்களம் நிறைந்த நாள் மகாசிவராத்திரி. இரவு என்பது அம்பிகைக்கு உரியது. அதனால் தான் நவராத்திரி எனக் கொண்டாடுகிறோம். ஆனால், அம்பிகையே சிவராத்திரி பூஜை செய்ய உலகிற்கு வழிகாட்டியிருக்கிறாள். ஒருசமயம் உலகம் அழிந்த போது, அனைத்தும் ஒடுங்கி எங்கும் இருள் சூழ்ந்தது. அப்போது அம்பிகை நான்கு ஜாமங்களும் (மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை) சிவனை பூஜித்தாள். விடியும் நேரத்தில் சிவன், தேவி! வேண்டும் வரம் கேள்! என்று கேட்க அவள், தேவதேவா! உங்களை நான் பூஜித்த இந்த இரவு சிவராத்திரி என வழங்கப்பட வேண்டும். எனக்குரிய ராத்திரி உங்களுக்கு உரியதாகட்டும். இந்நாளில் சிவபூஜை செய்தால் எல்லாவித செல்வங்களும் பெறுவதோடு, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையும் அருள வேண்டும், என வேண்டினாள். அப்படியே ஆகட்டும்! என சிவனும் அருள்புரிந்தார். அம்பிகை தனக்கு உண்டான ராத்திரியில் சிவனைப் பூஜித்ததால் சிவராத்திரி என வழங்கச் செய்தாள்.
விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடியைத் தேடிய நாள் இது. இந்த வைபவம் மாசி தேய்பிறை சதுர்த்தசி நாளில் நிகழ்ந்ததாக ஸ்காந்த மகாபுராணம் கூறுகிறது. நமக்கெல்லாம் தெரிந்தது ஒரு சிவராத்திரி தான். ஆனால் ஐந்து சிவராத்திரிகள் உண்டு. அவை மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி. மாக சிவராத்திரியே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. வருஷ சிவராத்திரி என்றும் கூறுவர். சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே சாப்பாடு. மறுநாள்..... அதிகாலையிலேயே நீராடி அன்றாட பூஜையை முடிக்க வேண்டும். மாலையில் கோயிலுக்குச் சென்று அன்று இரவு கோயிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும். வீட்டில் பூஜையறையைச் சுத்தம் செய்து சிவன் சிலை அல்லது படத்துக்கு அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டிலும் விடிய விடிய பூஜை செய்யலாம். அப்போது சிவானந்த லஹரி, சிவபுராணம், தேவாரம்,திருவாசகம் படிக்க வேண்டும். வரத பண்டிதம் என்னும் நுõல் இவ்வாறு எளிய விரதமுறைகளைக் கூறுகிறது. வீட்டில் அபிஷேகம், பூஜை செய்ய முடியாதவர்கள் கோயில் சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளலாம். அனைத்திற்கும் மேலாக, சிவராத்திரியன்று கண் விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா பார்க்கக்கூடாது. |
|
|
|