|
சங்கீத மும்மூர்த்திகளில்ஒருவரான முத்துசாமிதீட்சிதர் வறுமையில் வாடினார். அவரிடம் பல மாணவர்கள் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்தனர். சீடர்களுக்கு பாடம் நடத்துவதோடு, உணவும் தர வேண்டியதும் அந்தக்கால கடமையாக இருந்தது.இதற்குரிய செலவைச்சமாளிக்க தீட்சிதரின் மனைவி ரொம்பவே தவித்துக் கொண்டுஇருந்தார். இசை பயின்ற சீடர்களில் கமலம் என்ற தேவதாசிப் பெண், தான் அணிந்திருந்த தங்க வளையலை அன்புடன் கழற்றிக் கொடுத்து, தாயே! இதை விற்று செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள், என்றாள். இதை தீட்சிதர் கவனித்து விட்டார்.அவர் கமலத்தை அழைத்து, எத்தனை நாள் இப்படி உன்னால் உதவி செய்ய முடியும்? என்னைக் காக்கும் பொறுப்பு இந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜருக்குத் தான் இருக்கிறது. என் பக்தி உண்மையானால் அவரே உங்களுக்கெல்லாம் உணவளிக்க அருள்புரிவார், என்றார். பிறகு தியாகராஜர் கோயிலுக்குச் சென்று தியாகராஜம் பஜரே என்ற கீர்த்தனையை மனம் உருகிப் பாடினார். வீடு திரும்பிய போது, வண்டி நிறைய தானியத்தை ஆட்கள் இறக்கி வைப்பது கண்டு திகைத்தார். பொருட்களை இறக்கி வைத்தவரிடம் அதுபற்றி விசாரித்தார்.சுவாமி! தஞ்சாவூரில் இருந்து மந்திரி ஒருவர் திருவாரூர் வர இருந்தார். அவருக்கான சமையல் பொருட்களை முன்னதாகவே கொண்டு வந்தோம். சூழல் காரணமாக மந்திரியால் வர இயலவில்லை. அதனால், தங்கள் இசைப்பள்ளி மாணவர்களின் சாப்பாட்டுக்கு உதவட்டுமே என்று அதிகாரிகள் இங்கே அனுப்பி வைத்தனர், என்றார்.தியாகராஜரின்கருணையை எண்ணிய தீட்சிதர் உள்ளம் உருகினார்.
|
|
|
|