Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பழி வாங்கியது எப்படி?
 
பக்தி கதைகள்
பழி வாங்கியது எப்படி?

நல்லது செய்ய நினைத்துச் செய்வது நல்லதாகிறது. சில நேரம் அது கெட்டதாகவும் முடிகிறது. கெட்டதை நினைத்துச் செய்வது, கெட்டதாக ஆகிறது. சில தருணங்களில் அது நல்லதாகவும் ஆகிவிடுவது உண்டு. இதில் சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்? கெட்டதை நினைத்துச் செய்து, கெட்டதாகவே முடிந்த வகையைச் சேர்ந்தவள் அவள். மனித இனத்தின் உணர்ச்சிகள் குறித்து நம் முன்னோர் சொன்னதைப் போல, இன்றுவரை வேறு யாரும் சொல்லவில்லை. அவர்கள் நமக்குத் தகுந்த உணர்ச்சிமயமான கதாபாத்திரம்தான், சூர்ப்பணகை. சூர்ப்பணகையைப் பற்றி அறிமுகம் செய்யும்போது, நீல மாமணி நிருதர்வேந்தனை மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் என்கிறார் கம்பர். அதாவது, இந்தச் சூர்ப்பணகை ராவணனை அடியோடு அழிக்கும் வல்லமை படைத்தவள் என்கிறார். சூர்ப்பணகை ராவணனின் சகோதரி ஆயிற்றே! அவள் ஏன் தன் அண்ணனை அழிக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. சூர்ப்பணகையின் கணவன் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. அவள் பிள்ளையின் பெயர் சாம்பன். ஒருமுறை போர் வெறியில் இருந்த ராவணன், வித்யுஜ்ஜிஹ்வானைக் கொன்றுவிட்டான். தங்ககையின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த திருமாங்கல்யத்தைத் தரையில் வீசிவிட்டான். சூர்ப்பணகை கொதித்துப் போனாள்.

நம் ஊர்ப் பெண்கள் காசு, பணம் எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக் கொள்வார்கள்; விட்டுக் கொடுப்பார்கள். ஆனால், கணவனைப் பங்கு போட மாட்டார்கள்; விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அயல் நாடுகளில் அப்படி இல்லை. வெளிநாட்டில், கணவனைப் புதைத்த இடத்தில் உட்கார்ந்து, அந்தக் கல்லறைக்கு விசிறிக்கொண்டிருந்தாளாம் ஒரு பெண். அதைப் பார்த்த ஒருவர் மிகவும் நெகிழ்ந்துபோய், அம்மா..! உனக்குத்தான் உன் கணவன் மேல் எவ்வளவு பக்தி! கல்லறையில் இருக்கும் கணவனுக்கும் வியர்க்கும் என்று விசிறிக்கொண்டிருக்கிறாயே! ஆஹா... என்னே பதிபக்தி! என்னே பதிபக்தி! என்று வியந்தாராம். உடனே அந்தப் பெண்மணி, அட, நீங்க வேற! என் கணவர் இறக்கும்போது, என் கல்லறை காயும் வரைக்குமாவது அடுத்த கல்யாணம் பண்ணிக்காதே என்று கேட்டுக் கொண்டார். அதனால்தான், கல்லறை சீக்கிரம் காயவேண்டுமே என்பதற்காக விசிறிக்கொண்டிருக்கிறேன் என்றாளாம். கவியரசு கண்ணதாசன் சொன்ன உதாரணக் கதை இது. அயல் நாடுகளில் இப்படி நடக்கலாம். ஆனால், இங்கே..?

கணவர் இறந்துவிட்டார்; அதுவும், கூடப் பிறந்தவனே கொன்று விட்டான் என்பது தெரிந்ததும், அண்ணன் ராவணனை அந்தகனிடம் அனுப்பிவிட வேண்டும் என அப்போதே முடிவு கட்டிவிட்டாள் சூர்ப்பணகை. முடிவு கட்டினால் போதுமா? அதற்கான சக்தி வேண்டாமா? மகன் சாம்பனை, தவம் செய்து சக்தி பெற்று வரும்படி அனுப்பினாள் சூர்ப்பணகை. அதன்படி, சாம்பன் தர்ப்பைப்புல் அடர்ந்த காட்டில் அமர்ந்து தவம் செய்தான். அவன் அங்கே  அமர்ந்திருப்பது யாருக்குமே தெரியாதவண்ணம் அடர்த்தியும் உயரமுமாக வளர்ந்திருந்தன தர்ப்பைப் புற்கள். சாம்பனின் தவம் ஸித்தியாகும் நேரத்தில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் வந்தார்கள். அப்போது காட்டில் தர்ப்பைப்புல் அறுக்கப்போன லட்சுமணன், புல்லோடு புல்லாகச் சேர்த்து, சாம்பன் தலையையும் அறுத்துவிட்டான். ஏற்கனவே கணவனை இழந்த துயரத்தில் இருந்த சூர்ப்பணகை, மகனையும் இழந்தாள். மனம் உடைந்தாள். மகனைக் கொன்றவர்களையும் மணாளனைக் கொன்றவனையும் மோதவிடுவது என்று தீர்மானித்தாள். இதில், யார் இறந்தாலும் அவளுக்கு லாபம்தான்! அதற்காகவே, மூக்கும் காதும் அறுபட்ட நிலையில், வேகமாக ஓடிப்போய் ராவணனிடம் சீதையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள். சீதையின் அழகை விரிவாக வர்ணித்துவிட்டு, அண்ணா! சிவபெருமான் தன் உடம்பின் பாதியில் பார்வதியை வைத்திருக்கிறார். லக்ஷ்மிதேவியை மகாவிஷ்ணு, தன் வக்ஷஸ்தலத்தில் வைத்திருக்கிறார். பிரம்மதேவர் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்திருக்கிறார். வீரனே! நீ சீதாதேவியைப் பெற்றால், எப்படி வைத்து வாழப் போகிறாய்? என்று கேட்டாள்.

வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி? -கம்பராமாயணம். மேலோட்டமாகப் பார்க்கையில், உன் உடம்பின் பாதியிலா? வக்ஷஸ்தலத்திலா? நாவிலா? எனக் கேட்பது போலிருக்கிறதல்லவா? ஆனால், உட்பொருள் அதுவல்ல! சீதையைக் கொண்டு வந்த பிறகு, நீ எங்கே வாழப் போகிறாய்? உனக்கு மரணம் நிச்சயம்! என்பதே சூர்ப்பணகையின் சிந்தனை.

இந்திரன் சசியைப் பெற்றான்
இரு மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்
தாமரைச் செங்கணானும்
செந்திரு மகளைப் பெற்றான்
சீதையைப் பெற்றால் நீயும்
அந்தரம் பார்க்கின்னன்மை
அவர்க்கில்லை உனக்கே ஐயா!

அதாவது, இந்திராணியைப் பெற்றதால், இந்திரன் நன்மை பெற்றான். உமாதேவியைப் பெற்றதால், சிவபெருமான் நன்மை பெற்றார். திருமகளைப் பெற்றதால், மகாவிஷ்ணு நன்மை பெற்றார். நீ மட்டும் சீதையைப் பெற்றாய் என்று வைத்துக்கொள்! இந்திரன், சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோரை விட, ஆகாயத்திலும் பூமியிலும் மிகவும் நன்மை அடைந்தவன் நீயாகத்தான் இருப்பாய்! என்கிறது அந்தப் பாடல்.

கடைசி இரண்டு வரிகளில் சூர்ப்பணகையின் உண்மையான மனோபவம் வெளிப்படும். அந்த வரிகளில் உள்ள வார்த்தைகளைப் பிரித்துப் பொருள் காண வேண்டும். அந்தரம் பார்க்கும் இன்னல் மை அவர்க்கில்லை, உனக்கே ஐயா! (அந்தரம்- ஆகாயம், பார்- பூமி, இன்னல்- துயரம், மை-குற்றம்)

ராவணா! நீ! சீதையைக் கொண்டு வந்தால் ஆகாயத்திலும் பூமியிலும், துயரமும் குற்றமும் உனக்கே உண்டாகும் என்பதே சூர்ப்பணகையின் உண்மையான வாக்கு. அவளின் எண்ணம் போலவே, சீதையைக் கடத்திக்கொண்டு வந்த குற்றத்தால், மிகுந்த துயரத்தை அனுபவித்து, பிறகு இறந்தான் ராவணன். ஆக, சூர்ப்பணகை தன் முயற்சியில் வெற்றி பெற்று, எண்ணியதை முடித்துவிட்டாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar