|
சுந்தர் பத்தாம் வகுப்பு மாணவன். நன்கு படித்து, நிறைய மார்க் வாங்க வேண்டும் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பது அவனது ஆசை. அவனது குடும்பம் தெய்வ பக்தியும் நம்பிக்கையும் கொண்ட குடும்பம். தேர்வுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு அவன் தாத்தா, அடேய் சுந்தர்! ஸ்கூலுக்குப் போகும் வழியில், தெருக்கோடியில் இருக்கும் பிள்ளையாரை பிரதட்சிணம் செய்து வழிபட்டுவிட்டுப் போ. அவர் அருளால், வகுப்பில் நீ முதல் ஆளாக வருவாய் என்றார். எப்படியாவது படிப்பில் முதலிடத்துக்கு வரவேண்டும்; அதற்குப் பிள்ளையாரும் உதவினால் நல்லதுதானே என்று சுந்தரும் அதற்கு ஒப்புக் கொண்டான். அன்று முதல் பிள்ளையாரைச் சுற்றி வந்து வழிபட ஆரம்பித்தான். அவனது நம்பிக்கை தீவிரமாயிற்று. ஒன்றுக்குப் பத்து முறை பிள்ளையாரை வலம் வந்தான். அதற்காகச் சில மணி நேரம் முன்பே வீட்டிலிருந்து புறப்படுவதை வழக்கமாக்கிக்கொண்டான். பரீட்சை வந்தது. நன்றாகவே எழுதினான். ரிசல்ட்டும் வந்தது. ஆனால் ஏனோ அவன் முதல் ரேங்க்கில் பாஸாகவில்லை. இதனால், பிள்ளையார்மீது கோபம் கொண்டான். தான் வழக்கமாக வழிபடும் கோயிலுக்குச் சென்று, என்ன பிள்ளையாரப்பா! உன்னை நம்பி தினமும் பக்தியோடு சுற்றிக் கும்பிட்டேனே! அதற்கு நீ தந்த பலன் இதுதானா? நான் அதிக மதிப்பெண் எடுத்து பரீட்சையில் முதல் ரேங்க்கில் பாஸாகவில்லையே! உன்னைச் சுற்றி வந்து கும்பிட்ட நேரத்தில் பரீட்சைக்குப் படித்திருந்தால், நல்ல மார்க் கிடைத்திருக்கும்; விரும்பியடி முதல் ரேங்க்கில் பாஸாகியிருப்பேன். என்னை ஏமாற்றிவிட்டாயே... ஏன்? என்று ஆவேசமாகக் கேட்டான்.
உடனே விநாயகர் தோன்றி, குழந்தாய்! உனக்கு ஒன்று நினைவிருக்கிறதா? முதல் நாள் நீ பரீட்சைக்குப் போகும்போது, வேகமாக ஒரு தண்ணீர் லாரி உன்மேல் இடிப்பதுபோல வந்தது அல்லவா? எனக் கேட்டார். ஆமாம், வந்தது. நல்ல காலம்... அப்போது அங்கு நின்றிருந்த பெரியவர் ஒருவர் என் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார். அதற்கென்ன? என்று கேட்டான் சுந்தர். உடனே விநாயகர், அந்தப் பெரியவர் நான்தானப்பா! நீ என்னைச் சுற்றி வந்ததால் உண்டான புண்ணிய பலனை உனக்குக் கொடுத்து, உன் உயிரைக் காப்பாற்றினேன். உனக்குப் பரீட்சை முக்கியமாக இருந்தது. எனக்கு உன் உயிர் முக்கியமாகத் தெரிந்தது. உன் புண்ணிய பலனால் உயிர் பிழைத்தாய். ஆக, நீ விரும்பியது போன்று அந்தப் பலனானது உனது பரீட்சைக்குப் பலன் தரவில்லை. போகட்டும், நீ எப்போதும் போல் கவனமாகப் படி; நல்ல மதிப்பெண் கிடைக்கும். தொடர்ந்து கோயில் வழிபாடு செய். அதனால் புண்ணியம் சேரும். உன் முயற்சிகள் கைகூடும். ஆனால், உன் பிரார்த்தனைக்கான பலனை எப்போது, எப்படி உனக்குத் தருவது என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன் என்று கூறி மறைந்தார். ஆம்... இறைவன் நாம் வேண்டுவதைக் கொடுப்பதில்லை; நமக்கு வேண்டியதைக் கொடுக்கிறார்!
|
|
|
|