|
தந்தை, தம் மகனிடம், இந்தப் பணத்தில் கடைக்குச் சென்று உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்று கூறி ஒரு தொகையைக் கொடுத்தார் அச்சிறுவன் பணத்துடன் கடைத்தெருவுக்குச் சென்று, சற்று நேரத்தில் திரும்பி வந்தான். தந்தைக்கு மகன் என்ன வாங்கியிருக்கிறான் என்பதைக் காண ஆவல். ஆனால், மகன் கையிலோ ஒன்றும் இல்லை. என்னப்பா, பணத்தைத் தொலைத்து விட்டாயா? ஒன்றும் வாங்கி வரவில்லையே என்றார். இல்லையப்பா, வாங்கி வந்திருக்கிறேன் என்றான் மகன். அப்புறம் ஏன் உன் கையில் ஒன்றும் இல்லை என்றார் தந்தை. அந்த மகன் தந்தையிடம், எனக்குப் பிடித்ததை நான் வாங்கிக் கொண்டு விட்டேன் அப்பா. நீங்கள் கொடுத்த பணத்தை சந்தையில் நின்றிருந்த ஏழைகள் நால்வரிடம் கொடுத்து புண்ணியம் வாங்கி வந்திருக்கிறேன் என்றான். மகன் முகத்தில் நிறைந்திருந்த திருப்தியைக் கண்ட தந்தை மனம் நெகிழ்ச்சியடைந்தது. இளம் வயதிலேயே இப்படி ஈகை குணத்துடன் திகழ்ந்த சிறுவன் தான் பின்னாளில் நாடே போற்றிய குருநானக். |
|
|
|