|
சீடர்கள் குருவை வணங்கி, தங்களுக்கு குரு தட்சிணை தர விரும்புகிறோம். என்ன வேண்டும் கேளுங்கள். எங்களால் செய்ய இயலாதது ஒன்றும் இல்லை என்றனர். அவர்களின் தற்பெருமையைப் போக்க வேண்டும் என்று நினைத்தார் குரு. சீடர்களே! நம் குருகுலத்துக்குப் பின்னால் உள்ள காட்டுக்குச் சென்று எதற்கும் பயன்படாத சருகுகளைக் கொண்டு வாருங்கள் என்றார். சருகுகளை ஏன் கேட்கிறார் என்று குழம்பிய படியே ஒரு கூடையுடன் காட்டுக்குள் நுழைந்தனர் சீடர்கள். அங்கே ஒரு மரத்தடியில் நிறைய சருகுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அள்ளி அவர்கள் கூடையில் போட, அங்கே வந்த ஒருவன், எதற்காக இந்தச் சருகுகளை எடுக்கிறீர்கள்? நான்தான் இவற்றை இங்கே குவித்து வைத்திருக்கிறேன். இதை எரித்து சாம்பலாக்கி என் நிலத்துக்கு உரமாகப் போடப்போகிறேன் என்றான். சருகுகளுக்கு இப்படி ஒரு பயனா? என்று நினைத்த அவர்கள், அவற்றை அங்கேயே போட்டுவிட்டு, இன்னும் சிறிது தூரம் சென்றனர். அங்கே மூன்று பெண்கள் உலர்ந்த சருகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். எதற்காக இந்தப் பயனற்ற சருகுகளை எடுக்கிறீர்கள்? என்று கேட்டனர் சீடர்கள்.
முதல் பெண், இந்தச் சருகுகளை எரித்து உணவு சமைப்பேன் என்றாள். இரண்டாமவள், வட்டமான இந்தச் சருகுகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து, சாப்பிடப் பயன்படும் இலையாகத் தைத்து விற்பேன் என்றாள். மூன்றாமவள், நான் குறிப்பிட்ட ஒரு மரத்தின் சருகுகளையே திரட்டுகிறேன். இந்தச் சருகுகளுக்கு மருத்துவ குணமுண்டு. இவற்றைக் கொண்டு நாட்டு மருந்து தயாரிக்கிறேன் என்றாள். பயனற்ற சருகுகளால் இவ்வளவு பயனா? என்று நினைத்த சீடர்கள், இன்னும் சிறிது தூரம் சென்றனர். அங்கே கிடந்த சில சருகுகளைப் பார்த்து இதை எடுப்போம் என்றான் ஒரு சீடன். அப்பொழுது ஒரு பறவை அந்தச் சருகையும் எடுத்துக் கொண்டு பறந்தது. அதன் பின்னால் சென்ற சீடர்கள், கூடு கடட் அந்தச் சருகு பயன்படுகிறது என்பதை உணர்ந்தார்கள். பயனற்ற சருகே கிடைக்காது போலிருக்கிறதே என்று ஏமாற்றத்துடன் திரும்பினர். என்ன, பயனற்ற சருகுகளைக் கொண்டு வந்து விட்டீர்களா என்று கேட்டு கூடையைப் பார்த்தார் குருநாதர். அது வெறுமையாக இருந்தது. குருவே! உலர்ந்த சருகுகள்கூட பலப்பல வழிகளில் பலருக்கும் பயன்படுகின்றன. பயனற்ற ஒரு சருகைக்கூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினர் சீடர்கள். மகிழ்ச்சியுடன் குரு, என் எண்ணம் ஈடேறி விட்டது. நான் விரும்பிய குரு தட்சிணை இதுதான். உலர்ந்த சருகே பலவழிகளில் பயன்படுமானால் பகுத்தறிவுள்ள மனிதன் இவ்வுலகத்துக்கு எவ்வளவு பயன்பட வேண்டும்! பிறருக்கு உதவும் எவ்வளவோ காரியங்களைச் செய்ய வேண்டும் என்றார். குருவே, உலர்ந்த சருகினால் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். இனி, நாங்கள் பிறருக்குச் சேவை செய்தே வாழ்வோம்! என்று கூறி விடைபெற்றனர். |
|
|
|