|
வைணவ ஆசார்யர் ராமாநுஜர், ஊர் ஊராகச் சென்று இறை தரிசனத்துடன், பாமர மக்களுக்கு பக்தி உபதேசமும் செய்து வந்தார். ஒரு நாள், துறவு நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவன் இவரை வணங்கி, தீட்சை பெற விரும்புவதாகத் தெரிவித்தான். அவன் கண்களை உற்றுப் பார்த்தார் ராமாநுஜர். இவன் அன்பில்லாதவனோ! என்ற ஐயம் அவருக்குள் எழுந்தது. அவனிடம், ஏனப்பா! வாழ்வில் எந்தப் பெண்ணையாவது நீ விரும்பி இருக்கிறாயா? என்று கேட்டார் ராமாநுஜர். துறவி, என்ன ஸ்வாமி... தாங்களா இத்தகைய கேள்வியைக் கேட்பது? என துடிதுடித்தபடி கேட்டான். ஆம்! பதில் சொல்! என்றார் ராமாநுஜர். ஸ்வாமி... அத்தகைய ஆசை எனக்கு இதுவரை வந்ததில்லை. இனிமேலும் வராது! யோசித்துச் சொல். கற்பனையிலாவது எந்தப் பெண் மீதாவது அன்பு செலுத்தி இருக்கிறாயா? நிச்சயமாக இல்லை. என்னுடைய கருத்தெல்லாம் அன்பு மீது இல்லை. முழுக்க முழுக்க துறவு பற்றிய எண்ணமே என்னைப் பற்றியுள்ளது. தயவு செய்து என் லட்சியமான தீட்சையை தாங்கள் வழங்குவதோடு, என்னை தங்களுடைய சீடனாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பனே, அன்பின் உச்ச நிலையே வழிபாடு. அடிப்படையான அன்பு இல்லாத உன் மன நிலைக்கு, துறவு சரிப்பட்டு வராது. எனவே, உனக்கு தீட்சை வழங்குதல் எளிதல்ல! என்ற ராமாநுஜர் தம் பயணத்தைத் தொடர்ந்தார். |
|
|
|