|
குரு ஒருவரிடம் ஓடிவந்த சீடன் ஒருவன், சுவாமி! நீங்கள் சொன்னபடியே பக்கத்து கிராமத்தில் வயது முதிர்ந்த ஏழைக்கு உறுதுணையாக இருந்தேன். அவர் வயலை உழுவது, நீர் பாய்ச்சுவது, நாற்று நடுவது போன்ற பல <உதவிகளைச் செய்தேன்! என்று தான் செய்த சேவைகளை விவரித்தான். கூடவே குரு தன்னைப் பாராட்டுவார் என்றும் எதிர்பார்த்தான். குருவோ, அப்படியா ரொம்ப சரி! இன்னொரு கிராமத்தில் நீரூற்று வற்றி விட்டதாம். அதை தூர்வாரும் பணியை மேற்கொள்! என்று அடுத்த சேவைக்கு அவனை உட்படுத்தினார். குருவே! நற்பணி செய்து வந்த என்னை தாங்கள் ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்? என்று சற்று எரிச்சலாகக் கேட்டான், சீடன். என் சீடனான உன் பணியை ஊரார்த்தான் பாராட்ட வேண்டும். அதுதான் முறை. நானே உன்னை பாராட்டினேன் என்றால் உனக்கு அகந்தை உண்டாகிவிடும். யாருக்கு உன் உதவி தேவையோ, அவர்களை நீ அலட்சியப்படுத்தக்கூடும். ஆகவே, நான் உனக்கு அடுத்த வேலை கொடுக்கிறேன். அதுதான் நான் உனக்குத் தெரிவிக்கும் பாராட்டு. நீ சிறப்பாய் செய்கிறாய் என்ற நிறைவில்தான் அப்படி அடுத்த வேலையை நான் உனக்குக் கொடுக்கிறேன். எனவே, நான் நேரடியாகப் பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்காதே! என்றார் குரு. |
|
|
|