|
கங்கை நதிக்குத் தெற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது சத்திய விரதம் என்னும் கிராமம். அங்கு, பிரஹத்தபா என்ற தவசி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலைப் பொழுதில் பகவானின் கல்யாண குணங்களை, ஹரி கதைகளாகக் கூறுவது வழக்கம். புண்ணியாதமா என்ற அந்தணரும் அதே கிராமத்தில் வசித்து வந்தார். பிரஹத்தபா எப்போது ஹரி கதை கூறுவதாக இருந்தாலும், அதை துவக்கத்திலிருந்து, முடியும்வரைக் கேட்பது அவரின் வழக்கம். இப்படி அவர் நூறாண்டு காலம் ஹரி கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார். புண்ணியாதமா கங்கை ஆற்றுக்கு நான்கு மைல் தொலைவில் வசித்தபோதும், ஒரு நாள்கூட கங்கா ஸ்நானம் செய்வதில்லை. கதை கேட்பதும், தம்மை நாடிவரும் அதிதிகளை வரவேற்று உபசரிப்பதுமாகவே தம் வாழ்நாளைக் கழித்தார். ஒருசமயம் தொலைதூர தேசத்திலிருந்து இரண்டு யாத்ரீகர்கள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டி, புண்ணியாதமா இல்லத்தில் தங்கினர். தம்மை நாடி வந்த யாத்ரீகர்களை அவர் வரவேற்று உபசரித்தார்.
உபசரிப்பு முடிந்ததும் அதிதிகளிருவரும், கங்கை ஆறு இங்கிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? என்று புண்ணியாதமாவிடம் கேட்டனர். அதற்கு புண்ணியாதமா, இங்கிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. இக்கிராமத்தில் நான் நூறாண்டு காலம் வாழ்ந்திருந்தாலும், ஒரு நாள்கூட நான் கங்கா ஸ்நானம் செய்ததில்லை. ஆனால், நான்கு மைல் தொலைவிலிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். அதிதிகளிருவரும், கங்கா ஸ்நானம் செய்யாத இந்த அந்தணனைப் போன்ற பெரும்பாவி இருக்க முடியாது. கங்கா ஸ்நானம் செய்யாத இவர் வீட்டுக்கு அதிதிகளாக வந்துத் தங்கியது பெரும் பாவம் என்று கோபமாகக் கூறிவிட்டு கங்கை ஆற்றினை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் கங்கை ஆற்றை அடைந்த போது, ஆறு சொட்டு நீர்கூட இல்லாமல் வறண்டிருந்தது. இறுதியில், கங்கா ஸ்நானம் செய்யாமலே காசிமாநகருக்குத் திரும்பினர். பின்பு, கங்கா தேவியை தியானித்து, தேவி, நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி, நாங்கள் கங்கா ஸ்நானம் செய்ய அருள வேண்டும் என்று வேண்டினர்.
அப்போது கங்காதேவி தோன்றி, அதிதிகளே! அந்த மகாபாக்கியவான் புண்ணியாதமாவை நீவிருவரும் அவமதித்து விட்டீர்கள். அந்தப் புண்ய ஆத்மாவின் பாதங்கள் என் மீது எப்பொழுது படும் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கு ஹரி கதை கூறப்படுகிறதோ அங்கு, கோடி பிரம்மஹத்தி தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டு. ஆனால், பகவான் விஷ்ணுவின் பக்தர்களை நிந்தனை செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை. எனவே, நீங்கள் இருவரும் அந்தப் புண்ணியாதமாவிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் திரும்பும் வரை உங்கள் கண்களுக்கு நான் தென்படவே மாட்டேன் என்று கூறி கங்கா தேவி மறைந்தாள். அதிதிகள் புண்ணியாதமாவைச் சந்தித்து, அவர்கள் செய்த பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினர். புண்ணியாதமாவும் அவர்களை மன்னித்து தம்முடன் இருக்கச் செய்து, ஹரி கதைகளைக் கேட்க வைத்தார். |
|
|
|