|
குரு ஒருவரிடம் வந்த இளைஞன் ஒருவன், சுவாமி! நண்பன் ஒருவன் எனக்கு நம்பிகை துரோகம் செய்து விட்டதால் நான் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறேன். அதனால் நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்! என்றான். நல்லது என்ற குரு கண்களை மூடி, இறைவா! மக்கள் பலவித மன அழுத்தத்தோடும், துயரத்தோடும் வாழ்கிறார்கள். அவர்களின் துன்பங்களைப் போக்க அருள்புரிவாய்! என கேட்டுக் கொண்டார். எனக்காக மட்டும் பிரார்த்தனை செய்யச் சொன்னால், இந்த குரு எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்கிறாரே என்று மனதிற்குள் கோபப்பட்டான் இளைஞன். இதை உணர்ந்த ஞானி, இளைஞனே! மழை ஒருவருக்காக பெய்கிறதா? காற்று ஒருவருக்காக மட்டும் வீசுகிறதா? சூரியன் ஒருவனுக்காக மட்டும் உதிக்கிறதா? என வினா எழுப்ப, இல்லை என்றான் அவன். நம்மைப் படைத்த கடவுள் உலகில் வாழும் எல்லோருக்காகவும், எல்லாவற்றையும் படைத்திருக்கிறார் அல்லவா! நீயும் உலக மக்களில் ஒருவன். உலக மக்கள் எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்யும் போது அது உனக்கும் சேர்த்துத்தானே! இப்போது புரிகிறதா? புரிந்தது! என குருவின் பாதங்களில் வீழ்ந்தான் இளைஞன். |
|
|
|