|
ஒரு நாட்டின் அரசன் மற்றொரு நாட்டின் மீது படையெடுக்க திட்டமிட்டான். அந்த நாட்டின் படை வலிமை, மக்களின் மனநிலையை அறிந்து வரும்படி ஒற்றன் ஒருவனை அனுப்பினான். ஒற்றன் அந்த நாட்டுக்குச் சென்ற போது, எங்கு பார்த்தாலும் மாடமாளிகைகளாகவே காட்சி தந்தது. மக்களே இப்படி ஆடம்பர மாளிகைகளில் வசித்தால், மன்னனின் மாளிகை அளவிட முடியாத அளவு பெரிதாய் இருக்குமே! என்று சிந்தித்தவனாய், ஒருவனை அழைத்து மன்னர் மாளிகை எங்கே? என்றான்.மன்னருக்கு மாளிகையா? அவருக்கு ஏது மாளிகை? அதோ! அங்கே பார்! அந்த மரநிழலில் ஒருவர் படுத்திருக்கிறாரே! அவர் தான் மன்னர்! மழை பெய்தால் மட்டும் அருகிலுள்ள கோயிலுக்குள் போய் விடுவார். எங்களை நன்றாக வாழ வைக்க, அரசு கஜானாவையும், தன் சொந்தப்பணத்தையும் எங்களுக்காக செலவழித்து எங்களை நன்றாக வாழச் செய்து, அவர் எளிமையாய் இருக்கிறார். அது சரி... நீ வெளியூர்க்காரன்... உனக்கு இந்த விபரெமல்லாம் எங்கே தெரியப்போகிறது? என்று பதிலளித்து விட்டு, நகர்ந்தான்.ஊர் திரும்பிய ஒற்றன்,மன்னரே! அந்த நாட்டு மன்னரை உங்களால் எந்தக்காலமும் வெற்றி கொள்ள முடியாது. காரணம், மன்னர் மீது மக்கள் தங்கள் உயிரையே வைத்துள்ளனர். அவருக்கு ஒரு ஆபத்து என்றால், ஊரே திரண்டு வந்து உயிரைக் கொடுத்து போராடும், என்றான்.இப்படிப்பட்ட எளிமையான அரசியல்வாதிகள் எந்த நாளில் நம்மை ஆளப் போகின்றனர்!
|
|
|
|