|
பகவான் ராமகிருஷ்ணரின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமான அன்பர்கள் கூடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஏழைப் பெண் ஒருத்தி ராமகிருஷ்ணரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தாள். கூடவே, அவருக்குத் தருவதற்கென்று சில ரசகுல்லாக்களையும் வாங்கி வந்திருந்தாள். அங்கிருந்த கூட்டத்தைக் கண்டதும் அவள் திகைத்து விட்டாள். இத்தனைப் பெரிய மனிதர்களெல்லாம் அமர்ந்திருக்கும் இந்தக் கூட்டத்தில், நமது ரசகுல்லாக்களை எங்கே வாங்கிக் கொள்ளப் போகிறார். என்று நினைத்து கூட்டத்திலிருந்து வெளியேறி, அங்கிருந்த வராந்தாவில் அமைதியாக அமர்ந்து தனக்குள் அரற்ற ஆரம்பித்தாள். அப்போது ராமகிருஷ்ணர், அறையிலிருந்து திடீரென்று வெளியே வந்து எதையோ தேடுபவர் போல் கண்களைச் சுழற்றினார். தற்செயலாகப் பார்ப்பதுபோல் அந்தப் பெண்ணை நெருங்கி அம்மா! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். வெலவெலத்து விட்டாள் அந்த பெண்! இப்படியும் ஒரு கருணையா? ஏழைக் குசேலருக்குக் கண்ணன் காட்டிய பரிவும். விலைமகளுக்குப் புத்தர் காட்டிய அன்பும் ஒருசேரத் தோன்றுகின்றன. அவளுக்கு. அவள் தந்த ரசகுல்லாக்களையும், அவற்றில் இழைந்திருந்த அன்பையும் சேர்த்துச் சுவைத்த ராமகிருஷ்ணர் அவளை மீண்டும் தமது கருணை பார்வையால் ஆசீர்வதித்துவிட்டு தம் அறைக்குத் திரும்பினார். |
|
|
|