|
அடர்ந்த காட்டின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அவன் (ஒருவன்) வசித்து வந்தான். பிராணிகளிடம் தயை உள்ளவன். ஒருமுறை காட்டில் அவன் ஒரு மான் குட்டியைக் கண்டெடுத்து, அதை அன்புடன் வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்த மான்குட்டி காணாமல் போயிற்று. அவன் மனம் பதைத்தது. மான் குட்டியை அபகரித்தவரைச் சும்மாவிடக்கூடாது என்று எண்ணினான். அதற்காக இறைவனை மனமுருகப் பிரார்த்தித்தான். இறைவனும் அவன் முன் தோன்றி, என்ன வேண்டும் என்று கேட்டார். இவனோ, எனது மான் குட்டியை அபகரித்தவன் என் கண் முன்னால் தோன்ற வேண்டும்; அவனை நான் பழி வாங்க வேண்டும் என்றான். இறைவன் அவனிடம் நன்றாக யோசித்துச் சொல், பின்னால் வருந்த நேரலாம் என்று பலவாறாக எச்சரித்தார். ஆனால், அவன் தன் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தான். வேறு வழியின்றி கடவுள் கையை உயர்த்தியதும் பயங்கரமாக உறுமிக் கொண்டு சிங்கம் ஒன்று அவன் முன் தோன்றியது. அதை கண்ட அவன் ஐயோ! தெரியாமல் கேட்டு விட்டேன்! என்னைக் காப்பாற்றுங்கள்! என்று அலறிக் கொண்டே ஓடினான். தேவையில்லாத பிடிவாதங்கள் மென் மேலும் சிக்கல்களை உருவாக்கிவிடும் என்பது அவனுக்குப் புரிந்தது. |
|
|
|