|
நல்ல செயல்களின் பலன் இவ்வுலகில் மட்டுமல்ல மேலுலகிலும் கிடைக்கும் என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
திவம் ஸ்ப்ருஸதி பூமிம்ச ஸப்த: புண்யஸ்ய கர்மண:
பண்டைக் காலத்தில் இந்திரத்யும்னன் என்றொரு ராஜா இருந்தான். அவன் மஹாதானி. அவன் செய்த புண்ணியத்தின் பலனாக அவனுக்கு ஸ்வர்க்கம் லபித்தது. பல ஆயிரம் ஆண்டுகள் ஸ்வர்க்க சுகத்தை அனுபவித்த பின் புண்ணியம் தீர்ந்து போய் பூமிக்கு வந்தான். அங்கு நாரதர் எதிர்ப்பட்டார். அவரிடம் அரசன், நான் செய்த தானத்தின் அடையாளம் ஏதாவது இன்னும் இருக்கிறதா? என்று வினவினான். நாரதர் எனக்குத் தெரியாது. ஆனால் இமயத்தில் ஒரு ஆந்தை இருக்கிறது. அதனிடம் கேட்டுப் பார் என்றார். அவ்வாறே ஹிமாலயத்திற்குப் போய் ஆந்தையைக் கேட்டான் இந்திரத்யும்னன். ஆந்தையும் தனக்குத் தெரியாதென்று சொல்லி, என்னை விட வயதில் மூத்த கொக்கு இருக்கிறது; அதைக் கேள் என்று சொல்லிற்கு. அரசன் கொக்கைத் தேடிப் பிடித்துக் கேட்டதற்கு அது தன்னைவிடப் பெரிய ஆமையைக் கேட்கும்படி சொல்லிற்று. அரசன் ஆமை வசித்துக் கொண்டிருந்த குளத்தையடைந்து ஆமையைக் கேட்டான். ஆமை, நான் ராஜா இந்திரத்யும்னனை அறிவேன். அவன் நிறைய கோதானங்கள் செய்தான். அந்தப் பசுக்களின் குளம்புகளினால்தான் இந்தக் குளம் உருவாயிற்று. என் வாழ்விற்கு இந்தக் குளமே ஆதாரம். அவனை நான் மறக்க வில்லை! என்றது. உடனே ஸ்வர்க்கத்திலிருந்து விமானம் வந்து இந்திரத்யுனனை அழைத்துப் போயிற்று. |
|
|
|