|
மகாமக குளத்தில்நீராடினால் முக்தி கிடைக்கும். அதாவது பிறப்பற்ற நிலை ஏற்படும் என்கிறார்கள். பூமியில் பிறந்தால் தான் கஷ்டம் என்பதே ஏற்படும். அது பணக்காரனாக இருந்தாலும் சரி தான்...ஏழையாக இருந்தாலும் சரி தான். ஒருவன்எல்லாவற்றையும் சாப்பிடவசதியிருந்தாலும் சுகர், பிரஷர் என வந்து சாப்பிட முடியாமல் கஷ்டப்படுகிறான்.இன்னொருவன் <உணவே இல்லாமல் சிரமப்படுகிறான். இரண்டுக்கும் வித்தியாசமில்லை. எனவே தான், இந்த கஷ்டமே இல்லாமல், இறைவனுடைய உலகத்தில் நிரந்தரமான ஆனந்தம் பெறவே பிறப்பற்ற நிலை வேண்டும் என்று மகான்கள் விரும்பினார்கள். இதற்கு பாதை காட்டுவது தான் மாசிமகம் போன்றவழிபாடுகள்.ஒரு பணக்காரனுக்குமுக்தியடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால், அவன் கஞ்சப்பிரபு. அவ்வூரில் நடந்த ஆன்மிகச் சொற்பொழிவுக்குப் போனான். அங்கே பேசியவர் தானதர்மம் செய்வது முக்தியைக் கொடுக்கும் என்றார். இவன் தான் கஞ்சனாயிற்றே! எனவே, தினமும் ஒரு பிடி அரிசி மட்டும் யாராவது ஒரு துறவிக்கு கொடுத்து வந்தான்.பொருள் மீது ஆசை உள்ளவர்கள் முக்தியடைய முடியாது என்பது அவனுக்குத் தெரியாது.
பலநாட்களாக பிடி அரிசி தானம் செய்தும் கூட, முக்தி அவனை எட்டிப்பார்க்க மறுத்தது. அவ்வூருக்கு வந்த ஒரு பெரிய சாமியாரிடம் போனான்.சாமி! நான் தினமும் பிடியரிசி தர்மம் செய்கிறேன். நீங்களும் இதோ பிடியுங்கள், என்றவனை துறவி ஏறிட்டு கூட பார்க்கவில்லை. தன் நகத்தால் அருகிலிருந்த மரம் ஒன்றை கீறிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பணக்காரன், ஏன் இப்படி கீறுகிறீர்கள். நான் தருவதை வாங்காமல், இப்படி கீறிக்கொண்டிருந்தால் எப்படி எனக்கு முக்தி கிடைக்கும், என்றான். அதற்கு சாமியார், அடேய், கீறிக்கீறியே இந்த மரத்தை கீழே விழ வைக்கப்போகிறேன், என்றதும் பணக்காரன் சிரித்தான்.சரிதான்! உமக்கு பைத்தியம் முற்றிவிட்டது. இது தெரியாமல் உம்மிடம் போய் முக்தி பற்றி பேச வந்தேனே! ஒரு கனமான மரத்தை நகத்தால் கீறி எப்போது கீழே சாய்க்க முடியும்? என்றான்.அடேய்! தினமும் ஒரு பிடி அரிசியில், நீ பிறப்பற்ற நிலையை அடைய முயற்சிக்கும் போது, நகத்தால் கீறி இந்த மரத்தை சாய வைக்க முடியாதா? என்று ஒரு போடு போட்டார் சாமியார்.பணக்காரனுக்கு சுள்ளென்று உரைத்தது. மிகுந்த பணிவுடன், சுவாமி! இப்போதாவது சொல்லுங்கள். நான் எப்படி முக்திஅடைவதென்று! என்றான்.அன்பனே! நீ ஒரு குடும்பஸ்தன். உன்னால் முழுமையாக பற்றுதலை விட முடியாது. எனவே, இந்த உலகத்தில் இருக்கும் எல்லாப் பொருட்கள், உறவுகள் மீது பட்டும் படாமல் உறவு வைத்திரு. வயதாக வயதாக அதையும் குறைத்துக் கொண்டே போ! ஜென்மங்கள் கழிய கழிய முக்திநிலையை அடைவாய், என்று அறிவுரைவழங்கினார்.மகாமக குளத்திற்குப் போகிறோம். குளக்கரையில் பலரும் தானம் செய்வதைப் பார்க்கிறோம். நாமும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். தானம் செய்தால் பொருள் மீதான பற்று குறையும். அப்படியே ஒவ்வொன்றின் மீதான பற்று குறைய குறைய முக்தியின் வாசலில் நாம் காலடி வைக்க முடியும். |
|
|
|