|
நிர்வாகத் திறமை மிக்க மன்னன் போஜராஜன் தர்மம் செய்யும் எண்ணம் இல்லாதவனாக இருந்தான். ஒருநாள் மன்னன் நகர்வலம் வரும் போது, கோவிந்தன் என்னும் அந்தணர் தெருவில் வந்து கொண்டிருந்தார். போஜன் அவரிடம் ஆசிர்வாதம் பெறும் எண்ணத்துடன் தேரை விட்டுக் கீழிறங்கி, கைகளை குவித்து வணங்கினான். ஆனால்,அந்தணரோ தன் கண்களைமூடிக் கொண்டார்.என் நமஸ்காரத்தை ஏன் இப்படி அலட்சியப்படுத்துகிறீர்கள்? என்று அவரிடமே கேட்டான் மன்னன். காரணம் இருக்கிறது மன்னா! அந்தணனான எனக்கு உங்களால் ஒரு துன்பமும் நேராது. இருந்தாலும், கற்ற வித்தையைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்காதவன், உடல் பலமுள்ள கோழை, தானம் அளிக்க மனம் இல்லாத செல்வந்தன் ஆகியோரால் யாருக்கும் பயன் விளையப் போவதில்லை. அந்த வகையில் உன்னைப் பார்ப்பதே பாவம் என்பதால் கண்களை மூடிக் கொண்டேன், என்றார் அந்தணர். ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக முகஸ்துதியாக பாராட்டுபவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள். ஆனால், தங்களைப் போல உண்மையை தைரியத்துடன் வெளிப்படுத்துபவர்கள் ஒருசிலரே உள்ளனர். என் அறிவுக்கண்ணைத் திறந்த உங்களுக்கே முதலில் தானம் செய்யப் போகிறேன், என்றான் போஜராஜன். அந்தணரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றார். |
|
|
|