|
கல்யாண வயதில் இருந்த மகளுக்கு பெற்றோர் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். உறவுக்குள்ளேயே நல்ல மாப்பிள்ளை அமைந்தது. அந்த சம்பந்தத்தைப் பேசி முடிக்கத் தீர்மானித்தனர். ஆனால், பெண்ணுக்கோ இதில் இஷ்டமில்லை. இந்த ஊரிலேயே உயர்ந்தவர் யாரோ அவரைத் தான் மணப்பேன், என்று தீர்மானமாக பெற்றோரிடம் சொல்லி விட்டாள். அவள் வழிக்கே விட்டு விட எண்ணி,உன் இஷ்டப்படியே ஆகட்டும், என்றனர் பெற்றோர். அந்தப் பெண்ணோ நாடாளும் ராஜா தான் ஊரிலேயே உயர்ந்தவர். மணந்தால் அவரையே மணப்பது என உறுதி எடுத்தாள். ஒருநாள், பெற்றோருக்கு தெரியாமல், அரண்மனைக்குச் சென்றாள். நகர் வலம் செல்வதற்காக ராஜா பல்லக்கில் கிளம்புவதைக் கவனித்தாள். பல்லக்கைப் பின் தொடர்ந்தாள். வழியில் துறவிஒருவர் எதிர்ப்பட்டார். அவரைக் கண்ட ராஜா, பல்லக்கை விட்டுக் கீழிறங்கி அவரிடம் ஆசி பெற்றான். மீண்டும் பல்லக்கில் ஏறினான். அப்போது அந்தப் பெண்ணின் மனம் மாறியது. அடடா! ஏமாந்து விட்டேனே. இது நாள் வரையில் ஊரிலேயே உயர்ந்தவர் ராஜா என தவறாக நினைத்துக் கொண்டிருந்தேனே! ராஜாவே ஒருவரை வணங்குகிறார் என்றால், துறவி தானே உயர்ந்தவர்! இனி இவரே என் மணாளன், என்றபடி துறவியைத் தொடர்ந்தாள். துறவி ஒரு ஆலமரத்தடியில் நின்றார். அங்கிருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டார். அவரை வலம் வந்த துறவி நமஸ்காரம் செய்து விட்டு நடக்கத் தொடங்கினார்.
அடடே! நான் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறேன். துறவியைக் காட்டிலும் இந்த அரசமரத்துப் பிள்ளையார் அல்லவா உயர்ந்தவர்! என்ற முடிவுக்கு வந்தாள்.பிள்ளையாரே கதி என அவரின் அருகில் அமர்ந்தாள். பிள்ளையாரை நோக்கி நாய் ஒன்று வந்தது. அவரை சட்டையே செய்யாமல் இஷ்டம் போல, பக்கத்தில் படுத்துக் கொண்டு உருண்டது. தன்னை அலட்சியம் செய்த நாயைப் பிள்ளையார் கண்டிக்கவே இல்லை. அடடா! பிள்ளையாரையே இந்த நாய் அலட்சியப்படுத்துகிறதே! இதுவல்லவோ ஊரில் உயர்ந்தது என்று மனதை மாற்றிக் கொண்டாள். அங்கிருந்து நாய் நடக்க ஆரம்பித்தது. இளம்பெண்ணும் நாயைப் பின் தொடர முயன்றாள்.வழியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், நாய் மீது கல்லை எறிந்தான். லொள் என்று குரைத்த படியே தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியது. அப்போது, ஏண்டா! வாயில்லா ஜீவனைக் கல்லால் அடிக்கிறாய்? என்று அவனைக் கண்டித்தான் வாலிபன் ஒருவன். அண்ணா! தப்பு தான்! என்னை மன்னித்து விடுங்கள், என்று சொல்லி விட்டு சிறுவன் ஓடினான்.உயிர்களை நேசிக்கும் இந்த வாலிபனே உயர்ந்தவன். இவனைக் கல்யாணம் செய்து கொண்டால் வாழ்வு சிறக்கும் என முடிவெடுத்தாள். அவன் யாரென்றால், ஏற்கனவே அவளது பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட அதே மாப்பிள்ளை தான். உலகில் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததாகத் தான் நமது பார்வைக்குத் தெரியும். எனவே, நம் ஆசை என்பது ஒரு வட்டத்துக்குள் ஒடுங்காது. அது விரிந்து கொண்டே தான் செல்லும். அதனால், பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதும், மனதைக் கட்டுக்குள் வைப்பதுமே நம்மை உயர்த்தும். |
|
|
|