|
குரு ஒருவரின் ஆசிரமம் வழியாக சிலர் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே என்னதான் நடக்கிறது? என்று தெரிந்துகொள்ள எட்டிப் பார்த்தனர். உள்ளே கூச்சல், குழப்பத்துக்கிடையில் சீடர்கள் ஓடியாடிக்கொண்டிருந்தனர். இவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள்! என்றார் ஒருவர். அத்தனை பைத்தியங்களின் காட்டுக்கூச்சலுக்கு நடுவில் எப்படித்தான் குரு அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரோ! என்றார் இன்னொருவர். இப்படி ஆளாளுக்கு விமர்சனம் செய்தனர். சில மாதங்களுக்குப் பின் அவர்கள் மீண்டும் ஆசிரமம் வழியாகப் போக நேர்கையில், பைத்தியக்காரர்களுக்கு என்ன ஆகியிருக்கும்? என்று நினைத்தவாறு ஆசிரமத்தின் உள்ளே எட்டிப்பார்க்க, அவர்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போய் திரும்பினர். மேலும் சில மாதங்கள் கடந்தது. மீண்டும் அவர்கள் ஆசிரமத்திற்குள் சென்று பார்க்க, குரு மட்டுமே இருந்தார். என்ன நடக்கிறது இங்கே? என்று அவரிடமே கேட்டார்கள். முதல் முறை நீங்கள் கண்டபோது, அவர்கள் ஆரம்பகால சீடர்கள். எல்லோரும் உள்ளே இருந்ததைக் கொட்டிக்கொண்டு இருந்தார்கள். அடுத்த முறை நீங்கள் பார்த்தபோது, அவர்கள் பக்குவப்பட்டுவிட்டார்கள். அதனால்தான் மவுனமாக இருந்தார்கள். பின்னர் உலகத்தில் எங்கே போனாலும் மவுனமாய் இருக்க முடியும் என்று அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். இப்போது அவர்களுக்கு இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்களை அனுப்பிவிட்டேன். அடுத்த சீடர்கள் வரும் வரை காத்திருக்கிறேன். அடுத்தமுறை நீங்கள் இவ்வழியே செல்லும் போது பைத்தியக்காரத்தனத்தை மறுபடியும் பார்ப்பீர்கள்! என்றார், குரு. |
|
|
|