|
வைணவ அடியார்களுள் ஒருவரான மனசாலகட்டை சுவாமிகள் இறைவனுக்குக் கைங்கர்யம் செய்வதில் அலாதியான ஈடுபாடு கொண்டவர். ஒரு சமயம் காஞ்சி வரதராஜர் கோயிலை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் அணிந்திருந்த மோதிரம். அவர் செய்து கொண்டிருந்த வேலைக்கு இடைஞ்சலாக இருந்தது. அதைக் கழற்றி ஓரிடத்தில் வைத்துவிட்டு கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். வேலை முடிந்ததும் மோதிரத்தைக் கழற்றி வைத்த இடத்தில் தேடினார். மோதிரம் அவர் வைத்த இடத்தில் இல்லை. உடனே அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார். அதைக்கண்ட அவரது சீடர்களில் ஒருவர், சுவாமி! மோதிரம் காணாமல் போனதைப் பற்றிக் கவலைக் கொள்ளாதீர்கள்! புதிதாக வேறு மோதிரம் வாங்கிக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார். உடனே அவர் சீடனைப் பார்த்து என்னுடைய மோதிரம் தொலைந்து போனதற்காக நான் அழவில்லை. எனது அஜாக்கிரதையை நினைத்துதான் வருத்தப்படுகிறேன். என்னுடைய கவனக் குறைவு காரணமாக யாரோ ஒருவர் அந்த மோதிரத்தை எடுத்த கொள்ள வேண்டியதாயிற்று. பஞ்சமகா பாதகங்களிலேயே பொன்னைத் திருடுவதுதான் முதலாவது பாபமாகக் கருதப்படுகிறது, அந்தப் பாபத்தை ஒருவர் செய்வதற்கு நான் காரணமாகிவிட்டேனே! என்று அழுது கொண்டே சொன்னார் சுவாமிகள். |
|
|
|