|
கதாதர் பட்டர் உள்ளம்உருகும் விதத்தில் பக்திகதைகளைச் சொல்வார். ஒருமுறை பணக்காரர் ஒருவர் கதை கேட்க வந்தார்.தோரணையாக அமர்ந்தார். என்றுமே வராதவர்வந்திருக்கிறாரே என ஊரார் வியந்தனர். அன்று பாஞ்சாலி சபதம் கதையை பட்டர் சொல்லிக் கொண்டிருந்தார். அவளது புடவையை துச்சாதனன் இழுத்த போது, அவளது நிலையை பட்டர் சொல்லிக் கொண்டிருந்தார். பலரும் இதுகேட்டு கண்ணீர் விட்டனர். தானும் இளகிய மனமுள்ளவன் என்பதைக் காட்ட, பணக்காரரும் ஒரு தந்திரம் செய்தார். சிறிது மண்துகளை யாரும் அறியாமல் எடுத்து கண்ணில் போட்டுக் கொண்டார். உறுத்தலால் கண்ணீர் வழிந்தது. அவரது அருகில் இருந்தவர், கல்மனம் கொண்ட இவரா கண்ணீர் வடிக்கிறார் என ஆச்சரியப்பட்டார்.பிறகு தான் பணக்காரர் கண்ணில் மண் துகள் ஒட்டியிருந்ததைக் கவனித்து, இப்படியும் கூட உலகில் மனிதர்கள் இருக்கிறார்களே என நொந்து கொண்டார். சொற்பொழிவு முடிந்ததும் பட்டரிடம் சென்று, சுவாமி! இந்த பணக்காரர் செய்த தந்திரத்தைக் கேட்டீர்களா! என்றுநடந்ததைக் கூறினார். பட்டர் மேடையை விட்டு இறங்கி, பணக்காரரின் முன் விழுந்து வணங்கினார். பணக்காரர் திகைத்தார்.என்னை விட அறிவிலும் வயதிலும் பெரியவரான நீங்கள், என்னை வணங்குகிறீர்களே! என்றார்.அதற்கு பட்டர், இங்கு சிறந்த பக்தர் நீங்களே என்று சொல்லி விளக்கம் அளித்தார். பாஞ்சாலி துன்பப்பட்டதும், கிருஷ்ணர் அவளுக்கு புடவை கொடுத்ததும் கேட்டு கண்ணீர் வராவிட்டாலும், உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுக்கும் அளவுக்கு துணிந்து விட்டீர்களே! அதனால், உங்களை வணங்கினேன், என்றார். பணக்காரருக்கு உண்மையிலேயே கண்ணீர் வந்தது.
|
|
|
|