|
ஒரு சமயம் தியாகராஜ சுவாமிகள் தம் குருவான சொண்டி வேங்கடரமணய்யாவுடன் புதுக்கோட்டை அரண்மனைக்குச் சென்றிருந்தார். அரண்மனை சேவர்கள் சபையின் நடுவில் ஒரு குத்து விளக்கைக் கொண்டு வந்து வைத்துத் திரிகளைப் போட்டு எண்ணெய்யும் வார்த்தார்கள். ஆனால் விளக்கை ஏற்றவில்லை. சொண்டிவேங்கடரமணய்யாவுடன் தியாகராஜர் சுவாமிகளைக் கண்ட மன்னர், தங்களது இசைத்திறமையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று அதை நேரிலேயே தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தங்களது இசைத்திறமையால் விளக்கின் திரிகளில் தீமூட்டி எரியச் செய்ய வேண்டும்! என்றார். தியாகராஜர் சுவாமிகள் தம் குருவைப் பார்த்தார். சரி, ஆகட்டும்! என்று அனுமதி அளித்தார் குரு. தியாகராஜ சுவாமிகள் மெதுவாக ஆலாபனையை ஆரம்பித்தார். அவர் பாட எடுத்துக்கொண்டது ஜோதி ஸ்வரூபிணி என்னும் ராகம். என்ன அற்புதமான இசை! மனிதக்குரலா அல்லது தேவகானமா! என்று சபையோர் மயங்கினார்கள். ஜோதி ஸ்வரூபிணி தாயே, எனக்காக நீ இந்தத் தீபத்தை ஏற்ற மாட்டாயா? என்று தியாகராஜ சுவாமி பாடினார். என்ன ஆச்சரியம்! குத்துவிளக்கில் இருந்த திரிகளில் தாமாகவே தீப்பற்றிக் கொண்டன. சுவர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கின. மெய்சிலிர்த்த மன்னர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்தார். தியாகராஜ சுவாமிகளை வணங்கினார். சுவாமிகள் அடக்கத்துடன் சொன்னார், அரசே! இதில் எனக்கு எந்தப் பெருமையும் சேராது. எல்லாம் இறைவன் அருள்! |
|
|
|