|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » சிபி சக்கரவர்த்தி! |
|
பக்தி கதைகள்
|
|
வடநாட்டில் உசீனரதேசத்தில் சிபியென்றோர் அரசன் இருந்தான். அவன் வேள்விகள் புரிந்து இந்த்ரனையும் மிஞ்சிய அறஞ்செய்தவனானான். அடைக்கலம் புகுந்தவர்களையெல்லாம் அன்புடன் நடத்தி வந்தான். அவன் புகழ் நிலவுலகில் மட்டுமின்றித் தேவலோகத்திலும் பரவியது. இந்த்ரனுடைய அவையில் சிபியின் பெருமையைப் பற்றிய பேச்செழுந்தது. நேரில் சென்று கண்டறிவதென்று தேவர்கள் முடிவு செய்தனர். இந்த்ரனும் அக்னியும் அப்பணியை ஏற்றுக் கொண்டார்கள். அக்னி புறாவுருவெடுத்துக் கொண்டான். இந்த்ரன் பருந்தின் உருவம் கொண்டான். பருந்து புறாவைத் துரத்தியது. பருந்தின் பாய்ச்சலுக்கஞ்சிய புறா சிபியை நோக்கிப் பாய்ந்திறங்கியது. அப்பொழுது சிபியாக சாலையில் ஓர் ஆஸனத்தில் அமர்ந்திருந்தான். அவனுடன் அவனுடைய புரோஹிதரும் அமர்ந்திருந்தார். அத்தருணம் அப்புறா சிபியின் மடியில் விழுந்தது. அதைக்கண்ட புரோஹிதர், அரசே இப்புறா தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உன் மடியில் வந்து விழுந்திருக்கிறது. பின்னால் ஒரு பருந்து இதைத் துரத்திக் கொண்டு வருகிறது. புறா மடியில் வந்து விழுவது தீய குறியென்று பெரியோர் கூறுகின்றனர். சக்ரவர்த்தியாகிய நீ இதற்குப் பிராயச் சித்தமாகப் பொருள் தானம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
பருந்தும் அரசனையடைந்து இப்புறா என்னுடைய இரை. ஆதலின் அதை என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்டது.
சிபி: (பருந்தை நோக்கி) சரணம் வேண்டி என் மடியில் வந்து விழுந்த இப்புறாவை நான் கொடுப்பதற்கில்லை.
பருந்து: அரசனே! நீ அறம் தவறாதவன் என்று அரசர்களும் கூறுகின்றனர். ஆனால் நீ அறத்திற்கு முரணான செய்கையைச் செய்ய முயல்கின்றாய். நான் பசியால் வாடுகின்றேன். புறாவைக் காப்பாற்றுவது அறம் என்று மயங்காதே. என்னை பசித்து வாடவிடின் செய்ய வேண்டிய அறத்தைச் செய்யத் தவறியவனாவாய்.
அரசன்: பெரும் பருந்தே! சரணமாயடைந்த இப்புறாவை உன்னிடம் கொடுக்காமல் காப்பது அறமே யென்பதை நீ ஏன் உணரவில்லை. இது நடுங்குவது உனக்குத் தெரியவில்லையா? என்னையடைந்து விட்ட இப்புறாவை நான் காப்பாற்றாது விடுவது இழிய செயல். அடைக்கலம் புகுந்தவனை காக்காமல் விட்டு விடுவதும் அந்தணர்களையும் ஆவினங்களையும் கொல்வதும் சமமான பாவம்.
பருந்து: உணவினால் எல்லாவுயிர்களும் வளர்கின்றன. பிழைத்துமிருக்கின்றன. விடமுடியாத பிற பொருள்களை விட்டும் வெகுநாள் வாழலாம். உணவை விட்டு உயிர் வாழ்வது அரிது. இப்புறா எனக்குக் கிடைக்காவிடில் என் உயிர் போவது திண்ணம். நான் இறப்பின் என் மனைவி மக்கள் இறப்பர். நீ புறாவைக் காப்பாற்றும் முயற்சியில் பல உயிர்களைக் கொன்ற வனாவாய். அறத்திற்கு முரணாகும், அறம் அன்று. அது தீயநெறி. பிறவறங்களுக்கு முரணாகாத அறமே அறம். இவ்விரண்டில் எது பெரிது என்று தீர யோசித்துச் செய்.
புறா: (அரசனை நோக்கி) அரசே! இப்பருந்திற்கஞ்சி நான் உன் உயிர்ப் பிச்சைக்காக உன்னையடைந்துள்ளேன். நான் உண்மையில் புறா வல்லன். மறையோதியிளைத்த வொரு ப்ரஹ்மசாரி. தவம் செய்பவன். அடக்கமுள்ளவன். ஆசிரியருக்கு முரணாகப் பேசாதவன். பாவமற்றவன். என்னைக் கொன்று தின்பதற்காக இருப்பருந்து என் மேல் பாய்ந்தது. புறாவுருவெடுத்து ஓடி வருகிறேன். மறைகள் ஓதுகிறேன். வேதங்களில் ஒவ்வொரு எழுத்தையும் நான் விளக்கமாய் அறிவேன். அத்தகைய என்னைப் பருந்துக்குக் கொடுப்பது நல்ல கொடையாகாது. நான் புறாவல்லன். என்னை இப்பருந்தினிடம் கொடுத்து விடாதே.
பருந்து: அரசே! பிறவிகள் மாறி மாறியுண்டாகின்றன. இஃது ஏதாவதொரு படைப்பில் புறாவாகவுமிருந்திருக்கலாம். ஆதலின் இப்புறாவை நீயெடுத்துக் கொண்டு என் உணவில் இடைஞ்சல் விளைவிக்க வேண்டாம்.
அரசன்: (பறவைகள் இலக்கண வரம்பு பிறழாது இனிய நடையில் பேசுவதை எவரும் கேட்டதில்லை. இப்புறாவும் கழுகும் நன்கு பேசுகின்றன. இவைகளை நன்கறிந்த நான் எதைச் செய்தால் நன்மையாகும். அஞ்சி அடைக்கலமடைந்தவனைப் பகைவனிடமே கொடுத்து விடுபவனுடைய நாட்டில், மழை பெய்யாது. உரிய காலத்தில் விதைக்கப்பட்ட முளையும் முளையாது. அடைக்கலமடைந்தவனைக் கைவிட்டவன் தனக்கோராபத்து நேர்ந்த போது பாதுகாவலைப் பிறரிடமிருந்து பெற முடியாது. பிறந்த குழந்தை மரிக்கும். மூதாதையர் வெறுத்து விடுவர். அவன் கொடுக்கும் ஹவிஸ்ஸைத் தேவர்கள் ஏற்கமாட்டார்கள். அவன் உணவுண்பது வீண். அவன் துறக்கமெய்தான். எய்தினும் விரைவின் வீழ்வான். தேவர் அவனை வஜ்ரத்தால் அடிப்பர் என்று ஆலோசித்துப் பருந்தை நோக்கி) பருந்தே! நீ இருக்குமிடத்திற்கே நல்ல உணவும் மாட்டிறைச்சியும் கொண்டு வரச் செய்கிறேன். எங்களுடைய ராஜ்யத்தையே கொடுத்து விடுகிறேன். வேறு எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். புறாவைக் கொடுக்க மாட்டேன்.
பருந்து: அரசே! எனக்குமற்றவற்றின் இறைச்சி வேண்டாம். இப்புறாவிறைச்சியினும் எதுவும் உயர்ந்ததன்று. இது எனக்குணவாய் விதியால் படைக்கப்பட்டது. ஆதலின் இதுவே எனக்கு வேண்டும்.
அரசன்: இப்புறாவுக்கு ப்ரதிநிதியாக உயர்ந்த எருத்தின் இறைச்சியல்லது கன்று ஈனாத ஆவினிறைச்சி அனுப்புகிறேன். இப்புறாவைக் கொல்லாதே. நான் என் உயிரையும் விடுவேன். இப்புறாவைக் கொடேன். இது எளிய பிராணியென்பதையறியாயா? இது தவிர எதையும் செய்கிறேன்.
பருந்து: அங்ஙனாயின் உன் வலது தொடையிலிருந்து இறைச்சியையறுத்து இப்புறா நிறையளவு கொடு, உன் மூதாதையரும் உகப்பர். நானும் உவப்பேன். புறாவும் பிழைக்கும்.
உடனே அரசன் திராசையும் கத்தியையும் வருவித்தான். இறைச்சியையறுத்து, ஒரு தட்டில் புறாவையும் மற்றொன்றில் இறைச்சியையும் வைத்து நிறுத்தினான். புறா அதிக நிறையுள்ளதாயிருந்தது. பருந்தின் குறிப்பறிந்து மற்றொரு தொடையையும் அறுத்து வைத்து நிறுத்தினான். புறாவே நிறையதிகமாயிருந்து. உடல் முழுதுமறுத்து வைத்து நிறுத்தினான் பயனில்லை. பிறகு தானே தராசுத் தட்டில் ஏறி நின்றான். அரசன் அடைக்கலமடைந்தவர்களைத் தன் உயிரையுமீந்து காப்பாற்றுமியல்புள்ளவன் என்பதை நன்கறிந்து பருந்து புறாவைக் காப்பாற்றி விட்டாய் என்று கூறிக் கொண்டே பறந்து சென்று விட்டது.
புறாவே! நீ புறாவல்ல. உன்னுடன் வந்த பருந்தும் பருந்தன்று. நீங்கள் யார்? நீங்கள் இறைவர்களாயிருத்தல் வேண்டும். இறைவரல்லாதார் இவ்வாறு செய்யவியலாது என்று சிபி கேட்டான். அப்பொழுது புறா நான் அக்னி அப்பருந்து இந்த்ரன். உன் பண்பை நன்கறிவதற்காக வந்தோம். என்னைக் காப்பாற்றுவதற்காக நீ உன் உடலிலுள்ள மாம்ஸத்தை அறுத்து விட்டாய். உலகில் உன் புகழ் உள்ளளவும் உனக்குத் துறக்கம் முதலிய நல்லுலகங்கள் உண்டு. நான் உன் புண்களை ஆற்றுகிறேன். இறைச்சியே உங்களுக்கினி (கொடி முதலியவைகளில்) அடையாளமாயிருக்கும். காயமுற்ற உன் விலாப்புறத்தினின்று கபோதரோமன் என்ற பெயருடைய ஒரு புதல்வன் உனக்குப் பிறப்பான். அவன் சூரனாகவும் விளங்குவான் என்று கூறிப் பறந்து போயிற்று.
|
|
|
|
|