|
இந்திரஜித் பூவுலகில் தாம் செய்த புண்ணியப் பலனாக சொர்க்கலோக போகத்தைப் பல வருடங்கள் அனுபவித்து வந்தான். திடீரென ஒருநாள் அவனுக்குச் சொர்க்கபோக காலம் பூர்த்தியாகிவிட்டது என்றும், மீண்டும் பிறவி உண்டென்றும் கூறப்பட்டது. இந்திரஜித் சொர்க்கபோகம் எதுநாள்வரை? என்று தேவதையிடம் கேட்டான். ஒருவர் செய்த ஏதேனும் நல்ல செயலை, அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள யாரேனும் ஒருவர் ஞாபகம் வைத்திருக்கும் நாள் வரை என்றது தேவதை. அப்படியானால் நான் பூமியில் பிறந்து வாழ்ந்த இடத்துக்குப் போய் விசாரித்துப் பார்க்கலாம் என்றான் இந்திரஜித். அதன்படியே இந்திரஜித்தும் தேவதையும் அவ்விடத்துக்கு வந்தனர். எல்லாமே மாறியிருந்தது. யாருக்கும் இந்திரஜித் பற்றியோ, அவன் குடும்பம் பற்றியோ எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு வயதான முதியவர் மட்டும், சற்றுத் தொலைவில் உள்ள ஒரு மரத்தைக் காண்பித்து, அம்மரத்தில் ஆந்தை ஒன்று பல வருடங்களாக வாழ்ந்து வருகிறது. அதனிடம் கேட்டால் பழைய தலைமுறை பற்றிய விஷயங்கள் நிறைய உங்களுக்கத் தெரியவரும் என்று கூறினார்.
அவர்கள் அம்மரத்தினிடம் சென்று வயதில் முதிர்ந்த அந்த ஆந்தையிடம் விசாரிக்க, அதுவோ, என்னைவிட வயதில் முதிர்ந்த ஆமை ஒன்று அதோ அந்தக்குட்டையில் வசிக்கிறது. அதனிடம் சென்று கேட்டால் பல விஷயங்களை நீங்கள் அறியலாம் என்று கூறியது. இந்திரஜித்தும் தேவதையும் அந்தக் குட்டையில் வசிக்கும் ஆமையிடம் சென்று விசாரிக்க, இந்திரஜித் என்பவர் நிறைய பசுக்களை தம் வாழ்நாளில் தானம் செய்தார். தானம் செய்யப்பட்ட அப்பசுக்கள், தாம் வாழ்ந்த அந்த ஊரின் மேல் கொண்ட பற்றின் காரணமாக ஊர் எல்லையைத் தாண்ட மறுத்து, அதன் இயல்புப் படி தனது கால் குளம்புகளால் பூமியைக் கீறும். அப்படி ஏற்பட்ட குட்டைதான் இது. இந்திரஜித் பெரிய குட்டை ஏற்பட்டிருக்கும்? அது மட்டுமின்றி, இன்று இக்குட்டை என் போன்றவர்கள் வசிப்பிடமாக இருப்பதுடன், மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர்நிலையாகவும் பயன் தருகிறது. இதை என் தாத்தா எனக்குக் கூறியுள்ளார் என்றது ஆமை. இந்திரஜித்தின் புண்ணியப் பெருமையை அறிந்த தேவதை, அவனை பூமியில் வாழும் ஜீவராசிகள் இன்னும் நினைவில் வைத்துள்ளதைக் கணக்கில் கொண்டு, மறுபடியும் சொர்க்க போகத்தை அனுபவிக்க அழைத்துச் சென்றது. |
|
|
|