|
நமக்கு ஒரு கஷ்டம் வந்தால் பொறுத்துக் கொள்ளலாம். அதே நேரம், நம்மைச் சாராதவர்களாக இருந்தாலும் சரி, ஏன்.. பூச்சி புழுவாக இருந்தாலும் சரி... அதற்கு ஒரு கஷ்டம் என்றால், உடனே உதவ வேண்டும்.கேத்ரி என்ற ஊருக்கு விவேகானந்தர் வந்தார். அவ்வூர் மன்னருடன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு சாது மன்னரைப் பார்க்க வந்தார். வந்தவர், மன்னரின் செயல்பாடுகள் பற்றி கடுமையாக விமர்சித்தார். மன்னர் ஏதும் சொல்லவில்லை. பொறுத்துக் கொண்டார்.பின், அங்கிருந்த விவேகானந்தரை விமர்சிக்க ஆரம்பித்தார். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது.“சுவாமி! இத்தனை நேரமும் என்னை விமர்சித்தீர்கள். பொறுத்துக் கொண்டேன். இவர் என்னைக் காண வந்த விருந்தினர். இவரை விமர்சிப்பதாக இருந்தால், உடனே வெளியேறி விடுங்கள்,” என கோபத்துடன் சொன்னார்.சாது சிரித்தார்.“மன்னா! உன் கடமையைச் சரியாகச் செய்தாய். உன் செயல்பாட்டை விமர்சித்த போது பொறுமையுடன் கேட்டுக் கொண்டாய். குறைகளை திருத்திக் கொள்பவனுக்கு இதுதான் அழகு. ஆனால், உன்னை நாடி வந்தவரை விமர்சித்ததும் கொதித்தெழுந்தாய். விருந்தினராக வந்தவரை மதிப்புடன் நடத்த வேண்டியது நம் கடமை. அதை நீ சரியாக செய்துவிட்டாய்,” என சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து புறப்பட்டார்.புரிந்து கொண்டீர்களா! நமக்கு வரும் கஷ்டத்தை பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு ஒரு கஷ்டம் என்றால், உதவுதற்கு முன்னால் வந்து நிற்க வேண்டும் என்பதை! |
|
|
|