|
நாலு பேராவது பாராட்டணும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. புகழாசையால் நேர்ந்த விபரீதத்தை, ராமாயணம் விளக்கும் சம்பவம் இது. ஒரு சமயம் தசரதர், சம்பராசுரனுடன் போர் புரிந்தார். அவருக்கு தேரோட்டியாக கைகேயி (தசரதரின் மூன்றாவது மனைவி) சென்றாள். போரின் போது தேரின் அச்சாணி முறிந்து விட்டது. ஆனால், அது கண்டு கலங்காத கைகேயி, தன் கையை அச்சாணிக்கு பதிலாக நுழைத்து தேர் கவிழாமல் பாதுகாத்தாள். போர் முடிவில் சம்பராசுரன் தோற்கடிக்கப்பட்டான். வெற்றிக்களிப்பில் இருந்த தசரதர், தன்னைப் பாதுகாத்த மனைவிக்கு இரண்டு வரம் தருவதாக வாக்களித்தார். தேவையான சமயத்தில், வரத்தைப் பெற்றுக் கொள்வதாக அவள் சொல்லி விட்டாள். இவர்களுக்கு இடையே நடந்த இந்த சத்தியப்பிரமாணம் வேறு யாருக்கும் தெரியாது.
பின்னாளில், கைகேயி கூனியிடம் இதைச் சொல்லி பெருமைப்பட்டாள். அதாவது, தீமைக்கு வித்திட்டாள். காலம் உருண்டது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதர் ஏற்பாடு செய்தார். தகவல் அறிந்த கூனி,கைகேயி! சம்பராசுர யுத்தத்தில் இரு வரம் பெற்றதாகச் சொன்னாயே! அதை தசரதரிடம் இப்போது கேள்! என்று துõண்டினாள். கைகேயியும் அப்படியே செய்ய விபரீதம் விளைந்தது. தசரதரை வசப்படுத்தும் நோக்கில், தலையில் இருந்த பூவை எடுத்தெறிந்தாள். திலகத்தைக் கலைத்தாள். ஆபரணங்களை கழற்றி வீசினாள். அதன் பின், வாழ்வில் அலங்காரமே செய்ய முடியாத நிலைக்கு ஆளானாள். இது கதையல்ல! நமக்கு ஒரு பாடம். கணவருக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறது சாஸ்திரம். கைகேயி, தன் வீரம் குறித்து தனக்குள் மட்டும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் துன்பம் வந்திருக்காது. அது பிறர் கவனத்துக்கு சென்றதால் தான் பிரச்னை வந்தது. தற்காலத்தில், தம்பதியர் இடையே நடக்கும் மகிழ்ச்சியை பிறரிடம் சொல்கிறார்கள். இன்டர்நெட்டில், செல்பி என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். நாலுபேருக்குத் தெரிந்தால் பெருமை என்பதில் ஆரம்பிக்கும் விஷயம், நாளடைவில் மற்றவர் தலையீட்டால் வாழ்வு சீரழியக் காரணமாகி விடுகிறது. இதிகாசம், புராணம் எல்லாம் பொழுதுபோக்கான விஷயமல்ல. எச்சரிக்கை விடுத்து, நம் ஏற்றத்திற்கு வழிவகுக்கவே எழுதப்பட்டன. இனியேனும், கவனமாக இருப்பீர்களா!
|
|
|
|