|
கிராமம் ஒன்றில் ஒரு ஞானி இருந்தார். அவரது ஆலோசனைகள், உபன்யாசங்கள் மிகவும் பிரபலம். ஏழை, செல்வர் வேறுபாடு இன்றி எல்லோரும் அவரை நாடிக் கேட்டிருப்பர். ஒரு நாள், ஞானியைத் தேடி ஒரு செல்வரும், ஏழையும் வந்திருந்தனர். தங்கள் குறையை சொல்லி முறையிட்டு அழுதனர். இருவர் சொன்னதும் கிட்டத்தட்ட ஒன்றேதான்! கடவுளைக் காணும் வழி; கஷ்டத்தைப் போக்கும் வழியைச் சொல்லுங்கள், குருவே...? என்பதுதான். ஞானி பார்த்தார்; சிரித்தபடி ஏழையிடம் சொன்னார். கடவுளை எங்கும் காணலாம். கோயிலிலும் காணலாம்; கோபுரத்திலும் காணலாம். நம்பிகையாய் வழிபடு. நல்லது நடக்கும்! ஏழை சென்றுவிட்டார். செல்வரிடம் சொன்னார். யாகங்கள் செய்வது நல்லது. உன் இல்லத்தில் கணபதி ஹோமம் செய்வது சிறப்பானது. தினமும் நாராயணனை எண்ணி தியானம் செய். காயத்ரி மந்திரம் தினமும் 1008 முறை சொல். இயன்றால், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வா! செல்வரும் மகிழ்வுடன் நகர்ந்தார். சீடன் கேட்டான். மன்னிக்கவும் குருவே! ஏழை, செல்வர் கேட்டது ஒன்றே! ஆனாலும் அவர்களுக்கு வேறு வேறாக சொன்னீர்கள்...! பணத்தால் எடை போட வேண்டுமா...? ஞானி சிரித்தார். அறிவுரைகள் சொன்னால், குறைந்த அளவுக்காவது செய்பவரிடம் சொல்ல வேண்டும். இல்லையேல், சொல்வதே வீண்! அப்படியே இது! ஏழைக்கு ஆயிரம் கஷ்டம், கடன்; அன்றாட வாழ்வே சிரமம். அவரிடம் இதெல்லாம் சொன்னால், செய்யவும் முடியாது; செய்ய நேரமும் இருக்காது செல்வருக்கோ, நேரமும் உண்டு; செல்வமும் உண்டு. என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை. இவரிடம் சொன்னதை அவரிடமும் சொன்னால், அவரிடம் சொன்னதை இவரிடமும் சொன்னால்... பக்தியும் பெருகாது. அவர்கள் கஷ்டமும் தீராது. ஆக, அவரவரால் முடிந்தவற்றை செய்யச் சொன்னேன். என்ன செய்தாலும், எவருக்கு என்ன, எப்போது செய்ய வேண்டுமென்பதை ஆண்டவன் முடிவு செய்துகொள்வான்! சீடனுக்குப் புரிந்தது. |
|
|
|