|
குருநானக்கும் அவரது சீடரும் குசியால்கோட் எனும் நகரை அடைந்தார்கள். தம் சீடரிடம், இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நகரத்துக்குள் செல் அரைப் பணத்துக்கு மெய்யும் மீதம் அரைப் பணத்துக்கு பொய்யும் வாங்கி வா என்றார். தம் குருவிடம் ஏன், எதற்கு என்று ஒரு பொழுதும் கேட்டறியாத அந்தச் சீடர், குருவின் கட்டளையை ஏற்று, நகரத்திலிருந்த அனைவரிடமும் ஒரு பணத்துக்கு பொய்யும், மற்றொன்றுக்கு மெய்யும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே சென்றார் பலரும் அவரை கேலி செய்தனர். கடைசியாக ஒரு கடைக்காரர் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்க்கை என்பது பொய் மரணம் என்பது மெய். இதை உங்கள் குருவிடம் சென்று சொல்லுங்கள் என்றார். குருவிடம் வந்த சீடர், நடந்தவற்றைச் சொன்னார். நாம் தங்குவதற்கு இந்த நகரத்தில் ஒரு நல்ல இடம் கிடைத்துவிட்டது. உண்மை தெரிந்த ஒரு மனிதர் இங்கே இருக்கிறார். நாம் அங்கே செல்வோம் வா! என்று சீடரை அழைத்துச் சென்றார் குருநானக். |
|
|
|