|
சிவ பக்தராக விளங்கிய மன்னர் ஒருவர் நல்லாட்சி நடத்தி வந்தார். அவரின் பக்தியை உலகிற்குப் பறை சாற்ற விரும்பிய சிவன் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். ஒருநாள் ஆயிரம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் சமாராதனைக்கு ஏற்பாடு செய்தார். ஆண்டவனை வழிபடுவது ஆராதனை. அடியார்களை ஆண்டவனாக எண்ணி வழிபடுவது சமாராதனை. சமாராதனை நேரம் நெருங்கியது. ஆயிரம் இலைகள் போடப்பட்டன. நுழைவாயிலில் நின்ற மன்னர், ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தார். 999 அடியவர்களை எண்ணி முடித்திருந்தார். இன்னும் ஒருவர் வந்தால் ஆயிரம் பூர்த்தியாகும் என்ற நிலையில், அமைச்சர் பந்தலுக்குள் இருந்து ஓடி வந்தார். ஆயிரம் இலைகளிலும் அடியவர்கள் அமர்ந்து விட்டதாகத் தெரிவித்தார். மன்னர் பந்தலுக்குள் வந்து, சரியாக கணக்கிட்டுத் தானே அடியவர்களை அனுமதித்தேன். ஆனால், இங்கு ஒரு இலை கூட காலியாக இல்லையே! என ஆச்சரியப்பட்டார். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும், மறுபடியும், அடியவர்களை எண்ண தீர்மானித்தார் மன்னர். ஆனால், கடைசி அடியவரை எண்ணும் போது, அதே 999ல் முடிந்தது. அதிர்ந்த மன்னர், சிவபெருமானே! இது என்ன விந்தை! அந்த ஆயிரமாவது அடியவரைக் காணவில்லையே! என்றார். அப்போது பார்வதியுடன் காட்சியளித்த சிவன், மன்னா! நானே அந்த அடியவர். உன் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டவே இப்படி திருவிளையாடல் நிகழ்த்தினேன். நீ அளித்த உணவை வயிறார சாப்பிட்டேன். பசித்தவர் வயிறெல்லாம் இந்த பரமனின் வயிறே. அடியார்களுக்கு உணவிட்ட புண்ணியத்தால் சிவலோகத்தில் வாழும் புண்ணியம் பெற்று விட்டாய் என்று வாழ்த்தினார். இந்த சிவன், ஆயிரத்தில் ஒருவர் என்ற திருநாமத்துடன் மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் என்னுர் திருத்தலத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திர திருநாளில் அன்னதானம் செய்வது பெரும் புண்ணியம் தரும். அடியவராக வந்து ஆட்கொண்ட சிவன் அருளைப் பெற நாமும் அன்னதானம் அளிப்போம்.
|
|
|
|