|
புது வருஷம் பிறக்கிறது. இன்பமாக வாழுங்கள் என எல்லாரும் வாழ்த்துவர். ஆனால், ஒரு கதை தெரியுமா? நீண்டகாலம் சொர்க்கத்தில் வாழ்ந்த ஒருவனுக்கு சலித்துப் போனது. அங்கிருந்து தப்பி வெளியில் வந்தான். வழியில், நரகத்தில் இருந்து தப்பிய இன்னொருவனை சந்தித்தான். இருவரும் நண்பர்களாயினர். நண்பனே! நரகம் எப்படி இருந்தது? என்றான் சொர்க்கவாசி. சித்திரவதை தாங்கமுடியலே! அங்கே ஏது சுகம்? அது கிடக்கட்டும்! உன் சொர்க்க அனுபவம் பற்றிச் சொல் என்றான் நரகவாசி. எப்போதும் கொண்டாட்டம், கும்மாளம் என்றே இருந்ததால் வாழ்க்கை சலித்து விட்டது. அதனால், அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்றான். இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது. யாருக்கும் தெரியாமல் இடம் மாறிக் கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி சொர்க்கவாசி நரகத்திற்கும், நரகவாசி சொர்க்கத்திற்கும் கிளம்பினர். ஆரம்பத்தில் மாறுதலாகத் தோன்றினாலும், நாளடைவில் இருவருக்கும் மனதில் வெறுமை ஏற்பட்டது. மீண்டும் தப்பி ஒருவரைஒருவர் சந்தித்தனர். இன்பமயமான சொர்க்கம், துன்பமயமான நரகம் இரண்டுமே வேண்டாம். வாழ்வில் இன்ப, துன்பம் இரண்டும் இருந்தால் தான் வாழ்வு ருசிக்கும் போல! அதற்காகத் தான் கடவுள் இரண்டையும் கலந்து பூலோக மக்களுக்கு தந்துள்ளார், என புரிந்து கொண்டனர்.எது வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை மன்மத புத்தாண்டில் பெறுவோம். |
|
|
|