|
குயவன் ஒருவன் பானைகள் செய்து விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். அவன் சிறந்த பக்தனும் கூட, வேலை நேரம் போக மற்ற நேரத்தை தியானம், கோயில் தரிசனம், விரத அனுஷ்டானம், தான, தர்மம் என்று கழித்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒருஆசை. என்றும் உடையாத பானைகளைச் செய்ய வேண்டும் என்று, ஒருநாள் அவன் கனவில் தோன்றி கடவுள், அவனிடம் வேண்டும் வரத்தைக் கேட்கும்படி கூறினார். குயவன் உடையாத பானைகள் தயாரிக்கும் தன் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தான். கடவுள் அவனிடம் நன்றாக யோசித்துக் கேட்கும்படி கூறியும். அவன் விடாப்பிடியாக அதையே மீண்டும் மீண்டும் கேட்டான். கடவுளும் அவனது விருப்பபடியே அவனுக்கு அவ்வரத்தைக் கொடுத்து மறைந்தார். அடுத்த நாள் காலை குயவன் ஒரு பானை செய்து அதை கீழேப்போட்டுப் பார்த்ததோடு கல்லாலும் அடித்துப் பார்த்தான். அது உடையாதது கண்டு மகிழ்ந்தான். இக்குயவனிடம் உடையாத பானை கிடைக்கும் என்ற செய்தி அக்கம்பக்கம் கிராமத்தில் பரவ, பானை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். வியாபாரம் அமோகமாக நடக்க குயவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. பானைகள் உடையாததால் புதுப்பானைகளுக்கான கிராக்கி குறைந்ததோடு, அடியோடு நின்றும்விட்டது. குயவன் செய்வதறியாது திகைத்தான். மறுபடி அவன் கனவில் தோன்றிய இறைவன் எப்படி இருக்கிறது உனது தொழில் என்று கேட்டார் குயவன். உடையாத பானைகளால் சுகம் கிடைக்கும் என்று எண்ணியது தவறு. இனி, உடைகிற பானைகளையே செய்ய வரம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். அதோடு, பழையன அழிவதும், புதியன பிறப்பதும் இயற்கையின் நியதி. அது அவசியமானதும் கூட என்றறிந்து தெளிவடைந்தான். |
|
|
|