|
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மீது பக்தி கொண்ட ஒரு பக்தர், பத்மநாபோ அமரப் பிரபு என்று மந்திரம் சொல்வதற்கு பதிலாக, பத்மநாபோ மரப்பிரபு என்று சொல்லி வணங்கி வந்தார். பத்மநாப சுவாமியே தேவர்களின் தலைவன் என்பது இதன் பொருள். ஆனால், அந்த பக்தரோ பத்மநாபன் மரங்களுக்கு தலைவனாக இருக்கிறான் என்பது தான், இந்த மந்திரத்தின் பொருள் போலும் என்று நினைத்துக் கொண்டு, ஒரு அரசமரத்தை தினமும் சுற்றி வந்தார். பண்டிதர் ஒருவர் இதைக் கவனித்து விட்டார்.ஐயா! நீங்கள் உச்சரிப்பது தவறு. பத்மநாபோ அமரப்பிரபு என்று தான் சொல்ல வேண்டும் எனக்கூறி விளக்கம் அளித்தார். இதுநாள் வரை தவறாக உச்சரித்து விட்டதை எண்ணிய பக்தர் வருந்தினார். அதன்பின் திருத்திச் சொல்லத் தொடங்கினார்.அன்று இரவு பண்டிதரின் கனவில் வந்த பெருமாள்,வனானி விஷ்ணு (காடுகளில் உள்ள மரம், செடி, கொடி அனைத்தும் விஷ்ணுவின் வடிவம்) என்று பராசரர் சொன்னது உமக்கு தெரியாதா? மரங்களுக்கும் நானே தலைவன். பக்தியோடு அரசமரத்தை பூஜித்த பக்தரின் மேன்மையை நீர் உணரவில்லையே, என்று கோபமாகச் சொன்னார். தவறாக மந்திரம் சொன்னாலும், துõயபக்தி இருக்குமானால் குழந்தையின் மழலை கேட்டு மகிழும் தாய்போல, கடவுள் நம் அன்பை முழுமையாக ஏற்றுக் கொள்வார். |
|
|
|