|
காசியில் வசித்த தர்மபாலன், பெயருக்கேற்ப தர்ம சிந்தனை கொண்டவர். அவருக்கு காசிநாதன் என்ற ஒரே மகன். பிள்ளை மீது கொள்ளை பாசம். தட்சசீலத்தில்உள்ள குருகுலத்தில் மகனைச் சேர்த்தார். ஒருநாள், குருநாதரின் மகன் ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில், சுழலில் சிக்கி இறந்து போனான். மாணவர்கள் இந்த விபத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். காசிநாதன் நண்பர்களிடம், எங்கள் குடும்பத்தில் இதுபோன்ற துர்மரணங்களே நிகழ்ந்ததில்லை. தீர்க்காயுளுடன் வாழ்ந்துள்ளனர். வயதான பின்னும் இயற்கை மரணமே அடைந்திருக்கிறார்கள், என்றான். இவன் இவ்வாறு பேசியது குருநாதர் காதுக்கு எட்டியது. அது பற்றி கேட்டார் குருநாதர். ஆமாம் குருவே! இதுபோன்ற மரணங்கள் எங்கள் குடும்பத்தில் கிடையாது என்று பெற்றோர் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன், என்றான் காசிநாதன். இதுபற்றி தர்மபாலனிடமே நேரில் கேட்டு விடத் தீர்மானித்தார் குருநாதர். அவரது வீட்டுக்குச் சென்றார். சில ஆட்டு எலும்புகளைத் துணியில் சுற்றி வைத்திருந்தார். தர்மபாலனைச் சந்தித்த குருநாதர் கவலையுடன், ஐயா! என்னை மன்னியுங்கள். இந்த கொடிய செய்தியை உங்களிடம் சொல்லும்படியான பாவியாகி விட்டேன்! குருகுலத்தில் இருந்த உங்கள் மகன் இறந்து போனான். என்றார். தர்மபாலன் சிறிதும் கலங்கவில்லை. ஐயா! தவறுதலாகச் சொல்கிறீர்கள்.
என் மகன் நிச்சயம் உயிருடன் இருப்பான். இது காசி விஸ்வநாதர் மீது ஆணை, என்றார். சந்தேகப்படுகிறீர்களா! இதோ! இந்த துணியில் அவனுடைய எலும்பு கூட இருக்கிறது, என்று காட்டினார் குருநாதர். அதைப் பார்க்க மறுத்த தர்மபாலன், தெய்வத்தின் அருளும், முன்னோர் ஆசியும் நிறைந்தது எங்கள் குடும்பம். தலைமுறை தலைமுறையாக நாங்கள் தீர்க்காயுளுடன் தான் வாழ்கிறோம், என்றார். தர்மபாலனின் மனஉறுதியைக் கண்டு குருநாதர், ஐயா! உங்கள் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். காசிநாதன் நலமோடு இருக்கிறான். கடவுள் அருளால் அவனுக்கு எந்தக் குறையும் நேராது. அவன் உங்கள் குடும்பம் பற்றி அடித்துச் சொன்ன உண்மையை அறியவே இப்படி நாடகமாட வேண்டிய தாயிற்று. மகன் இறந்து விட்டான் என சொல்லியும், மன உறுதியுடன் மறுப்பு சொன்னது எப்படி? என்று கேட்டார். குருவே! இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. நேர்மையாக வாழ்கிறோம். நல்லவழியில் பொருள் தேடுகிறோம். நல்ல மனிதர்களோடு உறவாடுகிறோம். விருப்பத்துடன் தான, தர்மம் செய்கிறோம். இவ்வாறு வாழ்ந்தாலே தீர்க்காயுளுடன் இருப்பீர்கள் என எங்கள் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். அதையே நானும் கடைபிடிக்கிறேன் என்றார் தர்மபாலன். நல்லவன் வாழ்வான் என்பதை அறிந்த, குருநாதரின் மனம் நெகிழ்ந்தது. |
|
|
|