|
குரங்கு புத்தி என்பார்களே! அதற்கு விளக்கம் தெரியுமா! மன்னன் நந்திவர்மன் அண்டை நாட்டையும் தனக்கு அடிமையாக்க எண்ணினான். மந்திரியுடன் ஆலோசித்தான். மன்னா! சிறிய நாடாக இருந்தாலும் அவர்களிடம் படை பலம் அதிகம். கிட்டாததை எண்ணிக் கெட்டாவி விடுவதை விட, கையில் இருப்பதை காப்பாற்றுவது மேல் என்று அறிவுரை கூறினார் மந்திரி. நந்திவர்மன் ஏற்கவில்லை. படையுடன் புறப்பட்டான். நீண்ட துõரம் குதிரையில் சவாரி செய்ததால் ஓரிடத்தில் மரநிழலில் ஒதுங்கி ஓய்வெடுத்தனர். வீரர்கள் குதிரைகளுக்கு கொள்ளு கொடுத்தனர். அப்போது ஒரு குரங்கு ஓடி வந்து கை நிறைய கொள்ளு அள்ளிக் கொண்டு மரத்தின் மீதேறியது. அதைத் தின்ன ஆரம்பித்தது. அப்போது கையில் இருந்த கொள்ளுவில் சிறிது கீழே விழுந்தது. அதை எடுப்பதற்காக மரத்தை விட்டு இறங்கியது. வீரர்கள் குரங்கை அடிக்க பாய்ந்தனர். குரங்கு அங்கிருந்து ஓட, கையில் இருந்த மீதி கொள்ளும் கீழே சிந்தியது. நந்திவர்மனுக்கு மந்திரி சொன்ன ஆலோசனை நினைவில் எழுந்தது. படைபலம் மிக்க எதிரியிடம் போரிட்டு, குரங்கு போல கையில் உள்ளதையும் இழந்து விட்டால் என்ன செய்வது? என்று சிந்தித்தான். போர் எண்ணத்தை கைவிட்டான். குரங்கால் புத்தி வந்ததைத் தான் குரங்கு புத்தி என்பார்கள். |
|
|
|