|
ஒரு அரசவையில் கவிராஜர், கவியரசர் என்னும் புலவர்கள் இருந்தனர். அவர்களுக்குள் மோதல் போக்கு இருந்தது. அவர்களை ஒற்றுமைப்படுத்த மந்திரியின் உதவியை நாடினார் மன்னர். மன்னா! முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். அவர்கள் வழியிலேயே சென்றால் தீர்வு கிடைக்கும் என்றார் மந்திரி. அதன்படி மந்திரி கவிராஜர் வீட்டுக்கு சென்றார்.கவிராஜரே! உம் மீது கொண்ட அன்பால் மன்னர் நாளை விருந்துஅளிக்க இருக்கிறார். தாங்கள் வர வேண்டும் என்றார். சம்மதித்தார் கவிராஜர். அமைச்சர் அவரிடம், கவிராஜரே! புலவர் கவியரசர் வெளியூர் சென்றதாகக் கேள்விப்பட்டேன். அவரையும் அழைக்க வேண்டுமே! என்றார். முகம் சுளித்தபடி, அவரைப் போய் புலவர் என்கிறீரே! அந்த மாட்டுக்கு ஒன்றும் தெரியாது என்றார் கவிராஜர். பதில் பேசாத மந்திரி கவியரசரிடம் புறப்பட்டார். அவரிடமும் அதே தகவலைச் சொன்னார். வருகிறேன் மந்திரியாரே! கழுதை போல கனைக்கும் கவிராஜரையும் அழைத்து இருப்பீர்களே! என்று கிண்டலாகச் சொன்னார் கவிராயர். மந்திரியும் சிரித்தபடி புறப்பட்டார். புலவர்கள் வந்தனர். மன்னர் சாப்பிட அழைத்துச் சென்றார். ஒரு தட்டில் புல்லும், மற்றொன்றில் காகிதமும் இருந்தது. இது என்ன விளையாட்டு? நாங்கள் என்ன மிருகங்களா? என்றனர் கோபமாக. புலவர்கள் என்று தான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால், மந்திரி மூலம் இருவரும் மாடு, கழுதை என சொன்னதை அறிந்தேன். அதற்கேற்ப விருந்து படைத்தேன், என்றார் மன்னர். இருவரும் திருந்தியதோடு, அறிவுக்கு விருந்தளித்த மன்னருக்கு நன்றியும் கூறினர்.
|
|
|
|