|
திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வசித்த சண்முக கவிராயர், சிவகாமசுந்தரி தம்பதிகளின் மகன் குமர குருபரன். ஐந்து வயதாகியும் அவன் பேசும் திறனற்றவனாக இருந்தான். செந்தூர் முருகனிடம் இதுபற்றி முறையிட, குழந்தையுடன் திருச்செந்தூர் வந்தனர் பெற்றோர். ஒருவேளை மட்டுமே சாப்பிட்ட அவர்கள் அதிலும் உப்பு சேர்க்காமல் கடும் விரதம் இருந்தனர். பல நாட்களாகியும் பிள்ளையிடம் எந்த மாற்றமும் இல்லை. குழந்தையை பேச வைக்காமல் முருகன் கோயிலை விட்டுச் செல்வதில்லை என்பதில் கவிராயர் உறுதியாக இருந்தார். முருகா! நீ எத்தனை நாட்கள் எங்களை சோதிப்பாய்? கருணாமூர்த்தியான நீ, இந்த பிள்ளையின் கள்ளம் கபடமற்ற முகத்தைப் பார்த்தும் இரங்கவில்லையா? நின் திருவடியின்றி எங்களுக்கு வேறு கதியில்லையப்பா, என்று உருகி வணங்கினார்.அப்போது குமரகுருபரன் அம்மா! அப்பா! என்று அழைத்தான். அவனது மழலைக்குரல் அவர்களின் காதில் தேனாகப் பாய்ந்தது. கவிராயர் தம்பதியர் முருகனின் அருள் கண்டு வியந்தனர். முருகா! உன் திருவடிகளே எமக்கு உற்ற துணை என்று சாஷ்டாங்கமாய் விழுந்து வழிபட்டனர். அதை ஏற்றுக் கொள்வது போல, கோயில் மணி ஒலித்தது. அந்த நிமிடமே, குமரகுருபரன் மடை திறந்த வெள்ளம் போல், முருகன் மீது கவி பாடினான். அப்பாடலே கந்தர் கலிவெண்பா என்னும் பெயர் பெற்றது. |
|
|
|