|
ஒரு பணக்காரருக்கு தீராத வயிற்றுவலி. வைத்தியம் பலன் அளிக்காததால், தங்கள் ஊருக்கு வந்த சாமியாரிடம் போனார். சுவாமி! விஷயம் இப்படி! நீங்கள் தான் இது குணமாக வழி சொல்ல வேண்டும், என்றார். தம்பி! உன் வயிற்று வலிக்கு காரணம் கண்கள். எனவே, நீ பார்க்கும் பொருள்களை எல்லாம் பச்சை வண்ணமாக செய்து கொள். குணமாகி விடும். அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன், என்றார். பணக்காரர் ஊரில் இருக்கும் எல்லா பெயின்டர்களையும் வரவழைத்து, வீட்டிலுள்ள நாற்காலி, கட்டில், சுவர், பாத்திரங்களில் கூட பச்சை பெயின்டை பூசச் சொல்லி விட்டார். ஒரு வழியாக வலியும் குறைந்து விட்டது. அடுத்த வாரம் சாமியார் வந்தார். அப்போது பத்து பேர் பச்சை வண்ண டின்களுடன் ஓடி வந்தனர். சாமி! பணக்காரரை பார்க்கவா போறீங்க!ஆமாம்... ஏனப்பா கேட்கிறீர்கள்?கொஞ்சம் நில்லுங்க! உங்க அங்கி சிவப்பா இருக்கு. அதை இந்தபச்சை வண்ணத்தாலே மறைச்சுடுதோம், எனச் சொல்லி அவர் மீது வண்ணத்தை வாரி இறைத்தனர்.சாமியாருக்கு கோபமான கோபம். நேரே செல்வந்தனிடம் சென்றார். முட்டாளே! பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக இருக்கட்டும் என்று தானே சொன்னேன். உன்னால் இந்த பூமிக்கும், வானத்துக்கும் பச்சை பூச முடியுமா! வண்ணத்துக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்த நீ, ரூபாய்க்கு இரண்டு பச்சைக் கலர் கண்ணாடி வாங்கிப் போட்டிருந்தால், பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரிந்திருக்குமே! இது கூடவா உன் மர மண்டைக்கு ஏறவில்லை, என்றார். இந்த பணக்காரரைப் போல, நம்மிடம் பல குறைகளை வைத்துக் கொண்டு, நாம் உலகத்தை சீர்படுத்த முயற்சிக்கிறோம். எனவே, நம்மைத் திருத்திக் கொண்டாலே போதும்! உலகம் தானாக திருந்தும். |
|
|
|