|
பண்டரிபுரத்தில் நாமதேவர் என்ற கிருஷ்ண பக்தர் தலைமையில் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருந்தனர். மறுநாள் விரதம் முடிக்க ரொட்டி தயாரித்தனர். அப்போது ஒரு நாய் வந்தது. அடுக்கியிருந்த ரொட்டியைத் தின்ன முயன்றது. பக்தர்கள் விரட்டினர். ஆனாலும், அது நாமதேவரின் கையில் இருந்த ரொட்டியைக் கவ்விக்கொண்டு ஓடியது. நெய் ஜாடியை பிடித்திருந்த நாமதேவர் அதைத் தொடர்ந்தார். ஓடாதே! நான் சொல்றதைக் கேள்! என்று கத்தினார். இதைக் கண்டவர்கள், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலும்! நாயிடம் போய் பேசுகிறாரே! என்று சொல்லி சிரித்தனர். ஆனால் நாமதேவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட நாய் நின்றது.நாமதேவர் அதனிடம், வெறும் ரொட்டியை உன்னால் சாப்பிட முடியாது. கொடு, நெய் தடவித் தரேன், என்று சொல்லி நெய் தடவிக் கொடுத்தார். அப்போது நாய் அதிசயமாக மறைந்தது. வானில் அசரீரி ஒலித்தது.நாமதேவா! உன் தர்மசிந்தனையைச் சோதிப்பதற்காகவே நாய் வடிவில் உன் முன் தோன்றினேன். எல்லா உயிர்களிலும் பாண்டுரங்கனான நான் இருப்பதை அறிந்த நீயே சிறந்த பக்தன், என்றது. பாண்டுரங்கன் லீலையைக் கண்ட பக்தர்கள் உருகி நின்றனர். |
|
|
|