|
கபீர்தாசர் ஒரு சமயம் கங்கை நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது புரோகிதர்கள் மூவர் அங்கு வந்தனர். படித்துறையில் வெள்ளம் அதிகமாக இருக்கவே, ஒரு சொம்பு இருந்தால் நீரை மொண்டு குளிக்கலாம். ஆனால், நம்மிடம் இல்லையே என வருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்ட கபீர்தாசர், தன்னிடமிருந்த சொம்பை கங்கைக்கரை மணலால் துலக்கி, கங்கை நீரால் கழுவி புரோகிதர்களிடம் கொடுத்தார். ஆனால், அவர்களோ கபீர்தாசரின் நெசவுத் தொழிலைச் சுட்டிக்காட்டி, அந்த சொம்பைத் தாங்கள் உபயோகிக்க இயலாது என்றனர். கபீர்தாசரோ, தான் சொம்பை கங்கைக்கரை மணலாலும், கங்கை நீராலும் சுத்தம் செய்ததைக் கூறித் தமது சொம்பை உபயோகிக்கும்படி வேண்டினார். புரோகிதர்களோ அவர் சொம்பை மறுபடியும் தொட்டுவிட்டதால் அது அதன் புனிதத் தன்மையை இழந்து விட்டதாகக் கூறினர். கபீர்தாசர் புரோகிதர்களின் பேச்சால் வருத்தப்படாது சாந்தமாக, அப்படியானால் நீங்கள் வேறொரு கங்கையை வரவழைத்துத்தான் நீராட வேண்டியிருக்கும் என்றார். இதைக்கேட்ட புரோகிதர்கள் வியப்புடன், ஏன் எனக் கேட்க, கபீர்தாசர்; ஏனெனில், இந்தக் கங்கையில் உங்களுக்கு முன்பாகவே நான் குளித்து விட்டேன். எனவே, இதுவும் புனிதம் கெட்டு விட்டிருக்கலாம் அல்லவா? என்றார் புரோகிதர்கள் வெட்கித் தலை குளிந்தனர். |
|
|
|